'கிரீன் மேஜிக் பிளஸ்' பால்: ஆவினில் திடீர் அறிமுகம் ஏன்?
'கிரீன் மேஜிக் பிளஸ்' பால்: ஆவினில் திடீர் அறிமுகம் ஏன்?
ADDED : டிச 13, 2024 05:53 AM

சென்னை: பச்சை நிற பால் பாக்கெட் கேட்கும் நுகர்வோரை ஏமாற்றும் வகையில், 'கிரீன் மேஜிக் பிளஸ்' என்ற பெயரில் புதிய பால் பாக்கெட்டை, ஆவின் அறிமுகம் செய்யவுள்ளதாக புகார் எழுந்துஉள்ளது.
ஆவினில், 6 சதவீதம் கொழுப்பு சத்துள்ள, ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் 500 மி.லி., 30 ரூபாய்க்கும், 4.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள பச்சை நிற பால் பாக்கெட், 22 ரூபாய்க்கும், 3 சதவீதம் கொழுப்பு சத்துள்ள நீல நிற பால் பாக்கெட், 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
3.5 சதவீதம் கொழுப்பு:
இதேபோல, 3.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பால் பாக்கெட்டில், வைட்டமின் ஏ மற்றும் டி சேர்த்து, 22 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதிக கொழுப்பு சத்துள்ள பச்சை நிற பால் பாக்கெட், 22 ரூபாய்க்கு கிடைப்பதால் பலரும் விரும்பி வாங்குகின்றனர். தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி, பச்சை நிற பால் பாக்கெட்டுகள் குறைத்து விற்கப்படுவதால், ஆவினுக்கு லிட்டருக்கு, 12 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது.
அதன் உற்பத்தியை நிறுத்த, இரண்டு முறை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நுகர்வோர்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பால் திட்டம் கைவிடப்பட்டது. அதற்கு பதிலாக, பச்சை நிற பால் பாக்கெட் உற்பத்தி, 80 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நுகர்வோரை நுாதனமாக ஏமாற்றும் வகையில், ஊதா நிற பால் பாக்கெட்டை பச்சை நிறமாக மாற்றி, 'கிரீன் மேஜிக் பிளஸ்' என்ற பெயரில் விற்பனை செய்ய, ஆவின் முடிவு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, ஆவின் நிர்வாக இயக்குநர் வினீத் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஆவினில் நாள்தோறும், 31 லட்சம் லிட்டர் பால் மற்றும் மாதந்தோறும், 50 கோடி ரூபாய் மதிப்பிலான பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பொது மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆவின் வாயிலாக பல்வேறு புதிய பால் மற்றும் பால் பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
18 முதல் விற்பனை
அதன்படி, பொது மக்களின் விருப்பம் மற்றும் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில், 'வைட்டமின் ஏ மற்றும் டி' செறிவூட்டப்பட்ட கிரீன் மேஜிக் பிளஸ் புதிய பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்பட உள்ளது. காஞ்சிபுரம் - திருவள்ளூர், கோவை, சேலம் பால் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, 18ம் தேதி முதல் விற்பனை செய்யப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.