கேரள கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க தனிப்படை: தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
கேரள கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க தனிப்படை: தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
UPDATED : ஜன 03, 2025 04:15 AM
ADDED : ஜன 03, 2025 12:57 AM

சென்னை: 'கேரள கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதை தடுக்க தனிப்படை அமைத்து, தமிழக அரசு கண்காணிக்க வேண்டும்' என, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து, ஆபத்தான மருத்துவ கழிவுகள், திருநெல்வேலி மாவட்டம் கொடகநல்லுார், பழவூர் கிராமங்களில் உள்ள பட்டா நிலங்கள், நீர்நிலைகளில் கொட்டப்பட்டன. இதுகுறித்து, அரசிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, நில உரிமையாளர்கள் குற்றம்சாட்டுவதாக, டிசம்பர் 17ம் தேதி, நாளிதழ்களில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, நெல்லை மாவட்ட கிராமங்களில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை, கேரள அரசு லாரிகளில் எடுத்துச் சென்றது.
இந்நிலையில், இந்த வழக்கு தீர்ப்பாயத்தில், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கேரள அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்தி விட்டோம். கழிவுகளை கொட்டிய மண்டல புற்றுநோய் மருத்துவ மையம், தனியார் மருத்துவமனை, தனியார் ரிசார்ட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 'அதில், தனியார் மருத்துவமனை மட்டுமே பதிலளித்துள்ளது. மருத்துவ கழிவுகளை கொட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
தமிழக, - கேரள தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையம் அரசுக்கு சொந்தமானது என, கேரள அரசு வழக்கறிஞர் கூறுகிறார்.
அப்படியெனில், அது சட்டத்திற்கு அப்பாற்பட்ட அமைப்பா? மருத்துவமனைகள் மீது தான் நடவடிக்கை எடுக்கவில்லை, தனியார் ரிசார்ட் மீது நடவடிக்கை எடுத்து, 'சீல்' வைப்பதில் என்ன தயக்கம்?
இரண்டு மருத்துவமனைகள், தனியார் ரிசார்ட்டுக்கு அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க வழங்கிய ஏழு நாட்கள் அவகாசம் முடிந்த பின், எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை, கேரள அரசு தெரிவிக்கவில்லை.
நோட்டீசுக்கு பதிலளிக்காத போதும், மருத்துவ கழிவுகளை கொட்டிய அரசு மருத்துவமனை, ரிசார்ட் தொடர்ந்து செயல்படுவது எப்படி?
மருத்துவ கழிவுகளை கொட்டியதாக கூறப்படும் தனியார் நிறுவனம், அதை தடுப்பதற்கான நடவடிக்கை குழுவில் இடம் பெற்றது எப்படி? தீர்ப்பாயம் உத்தரவிட்ட பின்னும், கேரளாவில் இருந்து மனித கழிவுகளை ஏற்றி வந்த லாரி பிடிபட்டுள்ளது.
தமிழகத்திற்குள் கழிவுகளை கொண்டு செல்வதை தடுக்க, கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக எல்லைகளில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க, தனிப்படையை அமைத்து, தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். அரசின் நடவடிக்கை திருப்தி அளிக்காவிட்டால், தீர்ப்பாயமே உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருக்கும்.
இது தொடர்பாக, கேரள வனம், சுற்றுச்சூழல் செயலர், கேரள மாசு கட்டுப்பட்டு வாரியம், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, வரும் 20ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.