'கிரீம் பன்'னுக்கு ஜி.எஸ்.டி., ஐந்தா, 18 சதவீதமா? அன்னபூர்ணா இருவேறு 'பில்'களால் மீண்டும் சர்ச்சை
'கிரீம் பன்'னுக்கு ஜி.எஸ்.டி., ஐந்தா, 18 சதவீதமா? அன்னபூர்ணா இருவேறு 'பில்'களால் மீண்டும் சர்ச்சை
ADDED : செப் 17, 2024 05:02 AM

கோவை : 'கிரீம் பன்' ஜி.எஸ்.டி.,விவகாரம் அவ்வளவு எளிதில் ஓய்வதாக இல்லை. அன்னபூர்ணா நிர்வாகமே,இத்துடன் முடித்துக்கொள்வோம் என்று சொன்னாலும், சமூக வலைத்தளங்களில் சர்ச்சை தொடர்கிறது.
கோவையைச் சேர்ந்த ஒருவர், அன்னபூர்ணாவில் 'கிரீம் பன்' வாங்கி, 'ஜி.எஸ்.டி., 18 சதவீதம் இல்லைங்க. 5 சதவீதம்தான் போட்ருக்காங்க' என, 'பில்'லுடன் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், அன்னபூர்ணாவில் 'கிரீம் பன்'னுக்கு 18 சதவீதம்தான் ஜி.எஸ்.டி., என மற்றுமொரு 'பில்' லும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
வீடியோவில் இருப்பது என்ன?
'கிரீம் பன்'னுக்கு 5 சதவீதம்தான் ஜி.எஸ்.டி., என, வெளியாகியுள்ள வீடியோ பதிவில் உள்ள 'பில்'லின்படி, அந்த நபர், கோவை கணபதியில் உள்ள அன்னபூர்ணா கிளையில் குளிரூட்டப்படாத அறையில் (நான் ஏ.சி.,) உணவருந்தியுள்ளார். அதன்பிறகு, 5 'கிரீம் பன்'கள் வாங்கியுள்ளார். அந்த 'பில்' (டேக்ஸ் இன்வாய்ஸ்: ஜிஏஎஸ்பி69561) அதே ஓட்டலில் 'ஸ்வீட்மேளா' பிரிவில் பார்சலாக வாங்கப்பட்டுள்ளது.
இதற்கு ஜி.எஸ்.டி., 5 சதவீதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பில், கடந்த 14ம் தேதி, காலை 9:53 மணிக்கு வாங்கப்பட்டுள்ளது.
மற்றொரு பில்
அதே, கணபதி அன்னபூர்ணா கிளையில், நேற்று முன்தினம் காலை 10:50க்கு வாங்கப்பட்ட 'பில்'லில் (ஜிஏஎஸ்பி70161), 'கிரீம் பன்'னுக்கான ஜி.எஸ்.டி., 18 சதவீதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பில்லும் 'ஸ்வீட் மேளா' பிரிவில் வாங்கப்பட்டு, பார்சல் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டும் பில்லும் ஒரே கிளையில் வாங்கப்பட்டுள்ளன. இரு பில்களிலும், ஜி.எஸ்.டி., பதிவு எண், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எண்களும் ஒன்றுதான். ஜி.எஸ்.டி.,க்கான ஹெச்.எஸ்.என். கோடும் (996334) ஒரே மாதிரியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், ஜி.எஸ்.டி., வரிவிகிதம் 5 மற்றும் 18 என, வெவ்வேறாக உள்ளது. தவிர, 14ம் தேதி வாங்கிய பில்லில், கிரீம் பன்னின் விலை (ஜி.எஸ்.டி.,சேர்க்காமல்) ரூ.19:06 என்றும், 15ம் தேதி வாங்கிய பில்லில் விலை ரூ. 18.65 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, 5 சதவீத வரியுடன் விற்கப்பட்ட கிரீம் பன் ஒன்று ரூ.20 ஆகவும், 18 சதவீத வரியுடன் விற்கப்பட்ட கிரீம் பன் 22 ஆகவும் 'பில்'லில் காட்டப்பட்டுள்ளது. இந்த ஜி.எஸ்.டி., வரிவிகித மாறுபாடு சர்ச்சையாகி உள்ள நிலையில், இதுகுறித்து விளக்கம்பெற முயன்றபோது, கணபதி அன்னபூர்ணா கிளை நமது அழைப்பை ஏற்கவில்லை. இதுதொடர்பாக, அவர்கள் தரப்பில் விளக்கம் அளித்தால், பிரசுரிக்கத் தயாராக உள்ளோம்.