ADDED : அக் 12, 2024 12:19 AM

திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி கிராம மக்களிடையே கிராமங்களை காக்கும் காவல் தெய்வங்கள் வழிபாடு வாழ்வில் ஒரு அங்கமாக உள்ளது.
தமிழக மண்ணில் வழிபாட்டு முறைகள் ஆழமாக பதிந்துள்ளதை கிராம கோயில்கள் மூலம் நாம் உணர முடியும். அவை நம்பிக்கை சார்ந்த விஷயமாக மட்டும் அல்லாமல் பலரது வாழ்வில் அவற்றின் வழிபாடுகள் ஒரு அங்கமாகவும் மாறி இருக்கின்றன.
கிராம தேவதைகளாக கால பைரவர், அனுமன், காளி தேவதைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடக்கிறது. கிராம எல்லையில் அமைக்கப்பட்டுள்ள எல்லை காவல் தெய்வங்களாக விளங்குகிறது. கிராமத்திற்குள் நோய்கள், திருடர்கள், பஞ்சம், பெருவெள்ளம் உள்ளிட்ட இயற்கை மற்றும் செயற்கையான பாதிப்புகள் நுழையாதபடி எல்லையிலேயே தடுத்து விரட்டுவதற்கான சக்தி அம்சங்களாக கிராம தேவதைகள் திகழ்கிறார்கள்.
திருவிழாக்களின் போது அப்பகுதி கிராம தேவதைகளுக்கு தனிப்பட்ட பலி பூஜைகள் செய்து அவற்றின் உத்தரவு கேட்டு பிறகே திருவிழா நடத்தப்படுவதும் வழக்கம். கிராமங்களை காக்கும் தெய்வங்களாக அய்யனார், அருள்புரியும் தெய்வமாக பேச்சி அம்மன், பக்தர்களின் மன விருப்பத்துக்கு இசைந்து அருள் தருபவளாக இசக்கி அம்மன் உள்ளனர். ஆன்மிகம், ஆரோக்கியம், பாதுகாப்பு ஆகிய காரணங்களை முன்னிட்டு அவை வெவ்வேறு சக்தி நிலைகளை வெளிப்படுத்திய வண்ணம் இன்றும் உள்ளன.
திருவாடானை அருகேவுள்ள சிறுமலைக்கோட்டை கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமம் காக்கும் தெய்வமாக அய்யனார் உள்ளார். வைகாசி, ஆனி மாதங்களில் திருவிழா நடக்கும்.
குடும்ப பிரச்னை தீரவும், சந்தோஷமாக வாழவும் நேர்த்திக்கடனாக காளி, கருப்பர், குதிரை, அய்யனார் சிலைகளை செய்து வழிபாடு செய்து திருவிழா முடிந்தவுடன் கோயில் முன்புள்ள ஊருணிக்கரையில் வைத்து விடுவோம். இதன் மூலம் எங்கள் நீண்ட கால வேண்டுதல் நிறைவேறும் என்றனர்.
