'டின்னருக்கு' வந்த விருந்தினர்; நட்சத்திர ஹோட்டலில் அதிர்ச்சி
'டின்னருக்கு' வந்த விருந்தினர்; நட்சத்திர ஹோட்டலில் அதிர்ச்சி
ADDED : செப் 22, 2026 05:38 AM

வந்துவிட்டார் வக்கீல் 'ஜெமினி'
பெங்களூரில், 'ஸ்டார்ட் அப்' நிறுவனம் நடத்தும் சித்தார்த் தைலானி, தன் காரில் மோதிய, பைக் வாலிபர் மீது போலீசில் புகார் அளித்தார். கூகுள் ஏ.ஐ.,யின் சாட்பாட் 'ஜெமினி'யின் உதவியை பயன்படுத்தி, தயார் செய்த மூன்று பக்க புகார் மனு, கார் டேஷ்போர்டு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசாரிடம் அளித்திருந்தார்.
![]() |
முதலில் சித்தார்த் மீது குற்றஞ்சாட்டிய பைக் வாலிபர், வீடியோ காட்சிகளை பார்த்தவுடன் பல்டி அடித்தார். தன் மீதான தவறுக்கு கடும் குற்ற வழக்கு பதிவாகும் என்பதை உணர்ந்து, மனம் மாறி மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தார். காருக்கு நஷ்ட ஈடு தரவும் ஒப்புக்கொண்டார். வழக்கில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில், 'இப்போது ஜெமினி தான் என் வக்கீல்' என சித்தார்த் வெளியிட்ட பதிவு, வலைதளங்களில் 'டிரெண்டிங்'கில் உள்ளது.
'டின்னருக்கு' வந்த விருந்தினர்; நட்சத்திர ஹோட்டலில் அதிர்ச்சி
மும்பை ஜே.டபிள்யூ., மரியட் ஐந்து நட்சத்திர ஹோட்டலில், வெளிநாட்டு நண்பர்களுடன் சாப்பிடச் சென்றார், பிரபல இதய சிகிச்சை நிபுணர் அசோக் சேத். சாப்பிட தயாரானபோது, உணவு தட்டுகளுக்கு இடையே கரப்பான் பூச்சியை கண்டதும், அவருக்கு கடும் அதிர்ச்சி.
'டின்னருக்கு யார் வந்திருக்கிறார் பாருங்கள். குட்டி கரப்பான் பூச்சி, எங்கள் மேஜையில் உணவை பகிர்ந்து கொள்ள விரும்பியது. நாங்கள் வற்புறுத்தியும் அங்கிருந்து செல்ல மறுத்து விட்டது. ஒரு வேளை அதற்கு பாஸ்தாவை விட பீட்சா தான் தேவைப்பட்டிருக்கலாம்' என்று வலைதளத்தில் பதிவிட்டார் அசோக் சேத்.
'கரப்பானை கண்டதும், பசியே எடுக்கவில்லை, டின்னரை முடிக்காமலேயே புறப்பட்டு விட்டேன்' என, கூறியுள்ள சேத், 'நல்லவேளையாக நாம் துக்காராம் முண்டேவின் பகுதியில் இருக்கிறோம். அவர் இதை நிச்சயம் கவனிப்பார்' என்று உணவு மற்றும் மருந்து நிர்வாக கமிஷனரான அவரை 'டேக்' செய்துள்ளார்.
கண்ணீரை துடைப்பவர் கடவுள்
கோரக்பூர் - பாட்னா ரயில் பயணத்தின்போது, பெண் பயணி வைத்திருந்த குழந்தை அழத் தொடங்கியது. தாய்க்கு டீ கொடுக்க வந்த விற்பனையாளர், குழந்தையை சமாதானப்படுத்த முயற்சித்தார். விளையாட்டான சைகைகளை செய்தும், சிறிது நேரம் நடனம் ஆடியும் குழந்தையை மகிழ்வித்து அழுகையை நிறுத்தினார்.
![]() |
சக பயணியர், ராஜா பாபு என்ற அந்த விற்பனையாளரை பாராட்டினர். பாட்னாவை சேர்ந்த நீரஜ் சவுராசியா, எக்ஸ் வலைதளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
'கருணையே வடிவான எளிய மனிதர்கள்தான், நம் வாழ்க்கையின் உண்மையான நாயகர்கள்' என்று ஒருவரும், 'கண்ணீரை துடைப்பவர் கடவுள் என்றால், அவரும் கடவுள்தான்' என்று இன்னொருவரும் கமென்ட் செய்துள்ளனர். 'அவருக்கு ஒரு பரிசு கொடுங்கள்' என்று ரயில்வே நிர்வாகத்துக்கு பலர் பரிந்துரையும் செய்து வருகின்றனர்.
ஜப்பானில் மட்டுமே சாத்தியமா?
ஜப்பானில் வசிக்கும் இந்திய பெண் பிரகதி, தன் ஐபோனை தொலைத்து விட்டார். பல மணி நேரம் ஆன பிறகே, போன் தன்னிடம் இல்லாததை உணர்ந்த அவர், ஆப்பிளின் Find My App உதவியுடன் தேடினார்.
போன் இருக்குமிடம் தெரிந்தது. நள்ளிரவு என்ற போதும் தேடிச்சென்றார். அவர் எந்த இடத்தில் அமர்ந்திருந்தாரோ, அதே இடத்தில் போன் இருந்தது. இப்படி அவர், போனை தொலைத்து மீட்பது இது ஐந்தாம் முறை. 'உண்மையை சொல்லப் போனால், இது போன்ற விஷயங்கள் ஜப்பானில் மட்டுமே சாத்தியம் என்று எனக்குத் தோன்றுகிறது' என்கிறார், பிரகதி.
![]() |
வலைதளவாசி ஒருவர், 'பாதுகாப்பு, திருட்டு போன்ற எந்தக் கவலைகளும் இல்லாத ஒரு சமூகத்தில் வாழும்போதுதான் இந்த மகிழ்ச்சி கிடைக்கிறது' என்கிறார். 'திருடுபவர், சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாகும் ஜப்பானில் இது சகஜம் தான்' என்கிறார், இன்னொருவர்.
'மசாஜ்' செய்ய வந்தது குரங்கு
வட கிழக்கு மாநிலமான நாகாலாந்து அமைச்சர் தெம்ஜென் இம்மா அலோங், வலைதளத்தில் வெளியிட்ட குரங்கு மசாஜ் வீடியோ வைரல் ஆகியுள்ளது. திறந்திருந்த சலுான் கடைக்குள் வருகிறது அந்த குரங்கு. முடி வெட்டுவதற்கான நாற்காலியில் ஏறி படுத்துக் கொள்கிறது. சவரத் தொழிலாளி, குரங்கின் உடல், கால்களை நன்றாக மசாஜ் செய்து விடுகிறார். கண்களை மூடி 'மசாஜ்' செய்வதை அனுபவிக்கிறது குரங்கு.
![]() |
வீடியோவை பகிர்ந்த அமைச்சர் அலோங், 'மங்கேஷ் பாய் மசாஜ் செய்வதை அனுபவிக்கிறார். அவரை தொந்தரவு செய்யாதீர்கள்' என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். வீடியோவை பார்த்த வலைதளவாசிகள், சரமாரியாக கமென்ட் செய்து வருகின்றனர்.




