பாதிக்கு பாதி!:கட்டுமான தொழிலாளர் நிதி பயன்படுத்தவில்லை: கேரளா, ஒடிசா, ம.பி., அரசுகள் அபாரம்
பாதிக்கு பாதி!:கட்டுமான தொழிலாளர் நிதி பயன்படுத்தவில்லை: கேரளா, ஒடிசா, ம.பி., அரசுகள் அபாரம்
ADDED : அக் 31, 2024 02:19 AM

புதுடில்லி:கட்டுமான தொழிலாளர் நலனுக்காக வசூலிக்கப்படும், 'செஸ்' எனப்படும் கூடுதல் வரியில், 50 சதவீதத்தை கூட மாநில அரசுகள் பயன்படுத்தவில்லை என, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கட்டுமான தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் நலனுக்காக, 1996ல் கட்டடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர் சட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில், கட்டடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும். கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை, இந்த வாரியத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும்.
கூடுதல் வரி
அந்தந்த மாநிலத்தில் நடக்கும், 10 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட அனைத்து கட்டுமானப் பணிகளில், திட்ட மதிப்பீட்டில் 1 சதவீதத்தை கூடுதல் வரியாக வசூலிக்க வேண்டும். அந்தத் தொகை, வாரியத்தின் நிதியில் சேர்க்கப்பட்டு, கட்டுமான தொழிலாளரின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு, 1996ல் இருந்து இதுவரை, நாடு முழுதும், 1.12 லட்சம் கோடி ரூபாய், கட்டுமான தொழிலாளர் நல வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த துறையில் ஈடுபட்டுள்ள 5.65 கோடி பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் நலனுக்காக இது பயன்படுத்தப்பட வேண்டும்.
ஆனால், 2023 - 2024 நிதியாண்டு வரை, இதில், 64,193 கோடி ரூபாய், அதாவது மொத்த வரி வசூலில் 57 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 47,800 கோடி ரூபாய், அதாவது 43 சதவீதம் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
மிகப் பெரிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், அசாம் - 23.9 சதவீதம், ஆந்திரா - 15.4, குஜராத் - 18.2, டில்லி - 21.9, தமிழகம் - 39.9, ஹிமாச்சல பிரதேசம் - 46.5, ஜார்க்கண்ட் - 40.2, ஹரியானா - 47.1 சதவீத நிதியை மட்டுமே பயன்படுத்தியுள்ளன.
குறைந்தபட்ச ஓய்வூதியம்
அதே நேரத்தில் கேரளா வசூலித்த 3,457 கோடி ரூபாயையும் 100 சதவீதம் முழுமையாக பயன்படுத்தியுள்ளது. ஒடிசா - 84.5, மத்திய பிரதேசம் - 84.3, தெலுங்கானா - 76.5, உத்தர பிரதேசம் - 73.6, சத்தீஸ்கர் - 73.3 சதவீத நிதியைப் பயன்படுத்தியுள்ளன.
கட்டுமான தொழிலாளர் நல நிதியில் உள்ள 76,000 கோடி ரூபாயை நிதியாகக் கொண்டு, கட்டுமான தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இது உறுதி செய்யப்படவில்லை.

