டில்லி 'உஷ்ஷ்ஷ்!' ; ஹரியானாவை அடுத்து மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட்
டில்லி 'உஷ்ஷ்ஷ்!' ; ஹரியானாவை அடுத்து மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட்
ADDED : அக் 13, 2024 05:39 AM

ஹரியானா வெற்றி பா.ஜ.,வை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அடுத்து, மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தல்கள், அடுத்த மாதம் நடைபெற உள்ளன. ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-, காங்., கூட்டணி ஆட்சியில் உள்ளது; மஹாராஷ்டிராவில் பா.ஜ., கூட்டணி ஆட்சியில் உள்ளது.
'ஹரியானாவை அடுத்து, இந்த இரண்டு மாநிலங்களிலும், ஆட்சியை பிடிப்பது தான் பா.ஜ.,வின் குறிக்கோள். மஹாராஷ்டிராவில் பா.ஜ., கூட்டணி ஆட்சியை, தக்க வைத்துக்கொள்வது கடினம்' என, பல கருத்து கணிப்புகள் தெரிவித்து வருகின்றன.
'ஹரியானாவிலும் இதேபோல கருத்து கணிப்புகள் காங்., ஆட்சி அமைக்கும் என, சொன்னது. ஆனால், காங்., மண்ணைக் கவ்வியது. இதேபோல மஹாராஷ்டிராவிலும் நடக்கும்' என பா.ஜ.,வினர் சொல்கின்றனர்.
மஹாராஷ்டிரா சட்டசபை, 288 தொகுதிகளைக் கொண்டது. பா.ஜ.,வின் தேர்தல் திட்டத்தை, உள்துறை அமைச்சர் அமித் ஷா கையாண்டு வருகிறார். சமீபத்தில், மும்பை சென்று தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளார் ஷா. அதில், பா.ஜ., 150 - -160 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான, சிவசேனா 70 - 80 தொகுதிகளிலும், அஜித் பவார் தலைமையிலான, தேசியவாத காங்., 40- - 50 தொகுதிகளிலும் போட்டியிடும்படி ஒதுக்கீடு செய்துள்ளார்.
'மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் சிறிது உயர்ந்தாலே, அதிக, 'சீட்'கள் நமக்கு கிடைக்கும். லோக்சபா தேர்தலில் இங்கு குறைவான தொகுதிகளே கிடைத்தன என, வருத்தப்பட வேண்டாம்' என, கூறினாராம் அமித் ஷா.