டில்லியில் பா.ஜ., வெற்றியை தடுக்க ஆம் ஆத்மி - காங்., வியூகம்
டில்லியில் பா.ஜ., வெற்றியை தடுக்க ஆம் ஆத்மி - காங்., வியூகம்
UPDATED : மார் 10, 2024 08:09 AM
ADDED : மார் 09, 2024 11:23 PM

டில்லியில், புதிதாக கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை சந்திக்க உள்ள ஆம் ஆத்மி - காங்., கூட்டணி, இம்முறை அங்கு, பா.ஜ.,வின் ஹாட்ரிக் வெற்றியை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டில்லியில் மொத்தம் ஏழு லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்கு, 2014 மற்றும் 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், மொத்தமுள்ள ஏழு தொகுதிகளையும் பா.ஜ., கைப்பற்றியது. கடந்த, 2014 தேர்தலில், டில்லியில், 46.6 சதவீத ஓட்டுகளை பெற்ற பா.ஜ., 2019ல், 56.5 சதவீத ஓட்டுகளை பெற்றது.
கடந்த கால நிகழ்வு
இந்த இரு தேர்தல்களிலும் பா.ஜ., வெற்றி பெற்றதற்கு ஒரெயொரு காரணம் பிரதமர் மோடி தான். இதை யாரும் மறுப்பதற்கில்லை.
ஆனால், சட்டசபை தேர்தல் என வரும் போது, டில்லி வாக்காளர்கள் அப்படியே தலைகீழாக, ஆம் ஆத்மிக்கு ஓட்டளிக்கின்றனர். 2013, 2015 மற்றும் 2020ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மிக்கு வெற்றி பெற்றது. லோக்சபா தேர்தல் என்றால், பா.ஜ.,வுக்கும், சட்ட சபை தேர்தல் என்றால், ஆம் ஆத்மிக்கும் டில்லி மக்கள் ஓட்டளிப்பது, கடந்த கால நிகழ்வுகளில் தெளிவாக தெரிகிறது.
இங்கு காங்கிரஸ் என்ற கட்சி இருக்கிறதா என்பதையே டில்லி மக்கள் மறந்து விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியின் ஹாட்ரிக் வெற்றியை தடுக்க, டில்லியில், காங்கிரசுடன் ஆம் ஆத்மி கூட்டணி வைத்துஉள்ளது.
அதிகம் படித்தவர்கள்
காங்கிரசுடன் கூட்டணி வைக்கவே மாட்டேன் என கூறிய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது அதையெல்லாம் மறந்து கூட்டணி வைத்துள்ளார்.
பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக, ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்துள்ள காங்., தலைவர்கள் சோனியா, ராகுல் உள்ளிட்டோர், வரும் தேர்தலில் தங்களது கட்சியின், 'கை' சின்னத்துக்கு பதில், ஆம் ஆத்மியின், 'துடைப்பம்' சின்னத்துக்கு ஓட்டளிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
காரணம், அவர்கள் இருக்கும் தொகுதி ஆம் ஆத்மிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அரசியல் நோக்கர்கள் கூறுகையில், 'டில்லி வாக்காளர்கள் அதிகம் படித்தவர்கள். மத்தியிலும், மாநிலத்திலும் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கின்றனர். 'லோக்சபா தேர்தலில் நிச்சயமாக, பிரதமர் மோடிக்கு டில்லி வாக்காளர்கள் ஓட்டளிப்பர். ஆனால் சட்டசபை தேர்தல் என வரும் போது, இது வேறு விதமாக இருக்கும்' என்றனர்.

