உலகம் சுற்றும் வாய்ப்பு; உற்சாகத்துடன் கிளம்பிய எம்.பி.,க்கள்!
உலகம் சுற்றும் வாய்ப்பு; உற்சாகத்துடன் கிளம்பிய எம்.பி.,க்கள்!
UPDATED : அக் 26, 2025 06:08 AM
ADDED : அக் 26, 2025 12:13 AM

'ஆப்பரேஷன் சிந்துார்' ராணுவ நடவடிக்கை குறித்து, இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளிடம் எடுத்துச் சொல்ல, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் 75 பேர், பல நாடுகளுக்கு சென்று வந்ததனர். 'எங்களுக்கு இப்படி உலகம் சுற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லையே...' என, பல எம்.பி.,க்கள் வருத்தப்பட்டனர்.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் சில எம்.பி.,க்கள் பேசினராம். இதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தாராம் பிரதமர் மோடி. 'இந்த மாதம் மற்றும் அடுத்த மாத துவக்கத்தில், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஐ.நா., பொதுசபைக் கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்திற்கு எம்.பி.,க்களை அனுப்பலாம்' என முடிவெடுத்தாராம் பிரதமர். இதன்படி, 30 எம்.பி.,க்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டது. முதல் குழு நியூயார்க் சென்று திரும்பிவிட்டது; இரண்டாவது குழு இப்போது நியூயார்க் சென்றுள்ளது. முதல் குழுவில் தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியன், இரண்டாவது குழுவில் தி.மு.க.,வின் வில்சன், த.மா.கா.,வின் வாசன் உள்ளிட்ட எம்.பி.,க்கள் உள்ளனர்.
ஒரு வாரம் இலவச பயணம்; உடன் ஒருவரை அழைத்துச் செல்லலாம். முதல் வகுப்பு விமான பயணம், ஐந்து நட்சத்திர ஹோட்டல் என, ஏகப்பட்ட வசதிகள் இருக்கும்.
இப்படி அனைத்து கட்சி எம்.பி.,க்கள் ஜாலியாக அமெரிக்கா சென்று வந்தால், அடுத்த மாத இறுதியில் நடக்க இருக்கும் குளிர்கால பார்லிமென்ட் கூட்டத்தொடரில் சபை அமைதியாக நடக்குமா?

