தங்க விடுதி வேண்டும்... அதிக சம்பளம் வேண்டும்! உயர்கிறது வடமாநில தொழிலாளர்களின் குரல்
தங்க விடுதி வேண்டும்... அதிக சம்பளம் வேண்டும்! உயர்கிறது வடமாநில தொழிலாளர்களின் குரல்
ADDED : பிப் 17, 2025 11:54 PM

கோவை; கோவை மாவட்டத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கூட்டம், பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள கட்டடத் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, உ.பி., மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் சிங் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு வந்து, கட்டுமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு 1100 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டிய தொழிலாளிக்கு, 700 ரூபாய்- மட்டும் வழங்கப்படுகிறது.
1030 ரூபாய்- வழங்க வேண்டிய தொழிலாளிக்கு, 360 ரூபாய் - மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, சம வேலைக்கு சம சம்பளம் என்ற சட்டப்படி, வடமாநில தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
கோவை ரயில்வே ஸ்டேஷனில் தொழிலாளர் துறையும், காவல்துறையும் இணைந்து வடமாநில தொழிலாளர் பதிவு அலுவலகம் ஒன்றை அமைத்து, ரயில் மூலம் வந்து இறங்கும் தொழிலாளர்களை பதிவு செய்வதுடன், அங்கேயே அடையாள அட்டையும் வழங்கிட வேண்டும்.
வெளிமாநில தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தின்படி, பணி தரும் நிறுவனங்கள் குடியிருப்பு, உணவு, போக்குவரத்து செலவுகள் வழங்குவதில்லை.
கோவை வரும் வடமாநிலதொழிலாளர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் தங்கும் விடுதிகள் கட்டிக் கொடுக்க வேண்டும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், மாநிலப் பொதுச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீபக்குமார் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

