'அவர் சொன்னது எங்களை அல்ல'; தி.மு.க.,வை காட்டி கொடுத்த காங்.,
'அவர் சொன்னது எங்களை அல்ல'; தி.மு.க.,வை காட்டி கொடுத்த காங்.,
ADDED : ஆக 26, 2025 04:29 AM

த.வெ.க., தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மன்னர் ஆட்சி குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சொன்னது, எங்களுக்கு பொருந்தாது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் மதுரையில் த.வெ.க., மாநாடு நடந்தது. அக்கட்சியின் தலைவர் விஜய், தி.மு.க.,வை விமர்சிக்கும் வகையில் பேசினார். அப்போது, ''மன்னர் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்,'' என்றார்.
இது குறித்து, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ''ஒரு நிலைப்பாட்டை எடுத்து, அதில் விஜய் உறுதியாக நிற்க வேண்டும். மன்னர் ஆட்சி என பேசும் விஜய், அது குறித்து பேச வேண்டும் என்றால், முதலில் காங்கிரஸ் குறித்து தான் பேச வேண்டும்.
''நேரு, அடுத்ததாக அவருடைய மகள் குறித்து தான் பேசி இருக்க வேண்டும். அவர் ஏன் பேசவில்லை? ஒரு குடும்பத்தில் பிறந்த காரணத்தால் பதவி என்றால், முதலில் காங்கிரசை தான் ஒழிக்க வேண்டும்,'' என்றார்.
சீமான் பேச்சுக்கு, தமிழக காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் ரமேஷ்குமார் வெளியிட்ட அறிக்கை:
மன்னர் ஆட்சியை எதிர்க்க வேண்டும் என்று பேசிய விஜயை விமர்சிக்கும் வகையில் பேசிய சீமான், 'அப்படியென்றால், முதலில் காங்கிரசை தான் எதிர்க்க வேண்டும்' என, என்ன புரிதலுடன் பேசுகிறார் என தெரியவில்லை. அரசியல் தெளிவின்றி அவர் பேசுவதையே இது காட்டுகிறது.
மன்னர் ஆட்சியுடன் காங்கிரசை ஒப்பிடுகிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை தெரிந்து அவர் பேச வேண்டும்.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவியை, தமிழகத்தைச் சேர்ந்த காமராஜர் அலங்கரித்து இருக்கிறார். இந்த வரலாற்றை சீமான் மறைத்துவிட்டு பேசுகிறார்; இல்லை, மறந்துவிட்டு பேசுகிறார்.
நாட்டின் பிரதமரை அடையாளம் காட்டும் அளவிற்கு காமராஜர் புகழோடும், கட்சியில் செல்வாக்கோடும் இருந்தார்.
அப்படியென்றால், அது மன்னர் ஆட்சியா? கடந்த 2004, 2009ம் ஆண்டுகளில், இரு முறை பிரதமர் வாய்ப்பு மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டது.
மன்னராட்சி என்றாலோ, குடும்ப ஆட்சி என்றாலோ, மன்மோகன் சிங் எப்படி பிரதமர் ஆகி இருக்க முடியும்?
நேருவுக்கு பின், அவர்கள் குடும்பத்திற்கு வெளியே இருந்து, எத்தனையோ பேர் பிரதமர்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.
லால்பகதுார் சாஸ்திரி, நரசிம்ம ராவ் என நீண்ட பட்டியலே போடலாம். நேரு குடும்பத்திற்கு வெளியே, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களாக பலர் இருந்துள்ளனர்; தற்போது கார்கே இருக்கிறார்.
விஜயை கடுமையாக விமர்சித்து சீமான் பேசி வருகிறார். ஆனால், விஜய் தன் மாநாட்டில் சீமானை ஒரு பொருட்டாக நினைக்கவே இல்லை. அதனால் தான், சீமான் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இதனால் மன சங்கடத்தில் இருக்கும் சீமான், விஜயை துாற்ற வேண்டும் என்பதற்காக, காங்கிரஸ் கட்சி மீது புழுதி வாரி வீசுகிறார். சீமான் தன்னிலை உணர்ந்து பேச வேண்டும்; இல்லாவிட்டால், காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு, அவரது நிலையை உணர்த்துவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விஜய் பேசியது தி.மு.க.,வை தான். ஆனால், சீமான் சீண்டியது காங்கிரசை. காங்கிரசோ, விஜய் விமர்சனம் எங்களுக்கல்ல என்று கூறியிருப்பதன் வாயிலாக, 'விஜய் குறிப்பிட்டது தி.மு.க.,வை தான்' என மறைமுகமாக சுட்டிக் காட்டுவது போல் உள்ளது.
- நமது நிருபர் -

