'ஹலோ... நான் ஸ்டாலின் பேசுறேன்...' : மொபைல்போன் வாயிலாக முதல்வர் 'சர்ப்ரைஸ்'
'ஹலோ... நான் ஸ்டாலின் பேசுறேன்...' : மொபைல்போன் வாயிலாக முதல்வர் 'சர்ப்ரைஸ்'
ADDED : நவ 22, 2025 02:17 AM

தமிழகம் முழுதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி ஜரூராக நடக்கும் நிலையில், தி.மு.க., பூத் ஏஜன்ட் மற்றும் நிர்வாகிகளின் செல்போனுக்கு அழைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசுவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் வாக்காளர் திருத்தப்பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு உதவியாக களத்தில் சுற்றி சுழன்று வருகின்றனர் தி.மு.க.,வினர்.
இந்நிலையில், எஸ்.ஐ.ஆர்., பணியில் உள்ள பூத் லெவல் ஏஜென்ட்களாக இருக்கும் தி.மு.க.,வினரை செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு பேசி வரும் முதல்வர் ஸ்டாலின். 'எஸ்.ஐ.ஆர்., பணி எப்படி போகிறது. ஒரு ஓட்டு கூட விடுபட்டுவிடக்கூடாது' என சொல்வதோடு, 'இப்பணியில் ஈடுபடும்போது, ஏதேனும் இடைஞ்சல் இருக்கிறதா?' என்றும் கேட்கிறார்.
நேற்று இரவு மதுரையில் இருக்கும் கட்சித் தொண்டர்கள் பலரிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், பகுதி செயலர் சரவணனிடமும் பேசியுள்ளார்.
முதல்வர் பேசியது குறித்து சரவணன் கூறுகையில், ''வழக்கமாக கட்சியினரிடம் முதல்வர் செல்போன் வாயிலாக பேசப் போகிறார் என்றால், முன் கூட்டியே சம்பந்தப்பட்டவருக்கு தெரிவித்து, அலர்ட் செய்வர். ஆனால், எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபடும் கட்சியினரை, மாவட்ட நிர்வாகிகள் வாயிலாக தகவல் பெற்று, முதல்வரே நேரடியாக சம்பந்தப்பட்டவரை செல்போனில் அழைக்கிறார்.
''இப்படி என்னை அழைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், 'எஸ்.ஐ.ஆர்., பணிக்காக எத்தனை விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன? பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டதா?' என கேட்டார். பின், பணியை சிறப்பாக செய்து முடியுங்கள்; கட்சியில் சிறப்பான எதிர்காலம் உள்ளது என்று சொன்னார். இதே ரீதியிலேயே பலரிடமும் பேசி உள்ளார்,'' என்றார்.
இதற்கிடையில், 2026 சட்டசபை தேர்தல் முடியும் வரை, தி.மு.க., பூத் கமிட்டியினர் தொய்வடையக்கூடாது என்பதற்காக, கட்சியின் ஓட்டுச்சாவடி முகவருக்கு மாதந் தோறும் தலா, 2,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை ஊதியம் வழங்க, தி.மு.க., மேலிடம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில், 68,000 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும், அந்த கட்சிகளின் சார்பில், பூத் கமிட்டிகள் உள்ளன. ஒரு கமிட்டியில், 5 - 10 பேர் வரை உள்ளனர்.
அவர்களுக்கான கூட்டம், மாவட்டச்செயலர்களால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. வாக்காளர் திருத்தப்பணி குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கப் படுகிறது.
கூட்டம் முடிவடைந்த பின் உணவும், பூத் ஏஜன்டுக்கு, தலா, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இதற்கிடையில், 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டுள்ள பூத் கமிட்டியினர் சோர்வடையக் கூடாது; தேர்தல் முடிந்து, ஓட்டு எண்ணிக்கை நடக்கும் வரை, பூத் கமிட்டியினர் களப்போராளிகளாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு மா.செ.,வும் பூத் ஏஜென்ட்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல, சனி, ஞாயிறு என, விடுமுறை நாட்களில் பணியாற்றும்போது, சிறப்பு படி வழங்கவும் மேலிடம் அறிவுறுத்தி உள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
-நமது நிருபர்-

