பா.ஜ.,வுக்கு 'டாட்டா' காட்டிய ஹேமந்த் சோரன் - கல்பனா ஜோடி
பா.ஜ.,வுக்கு 'டாட்டா' காட்டிய ஹேமந்த் சோரன் - கல்பனா ஜோடி
ADDED : நவ 24, 2024 12:57 AM

ஜார்க்கண்டில் 'இண்டி' கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த கூட்டணியின் வெற்றிக்கு, முதல்வர் ஹேமந்த் சோரனும், அவரது மனைவி கல்பனாவும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
ஜார்க்கண்ட் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, ஹேமந்த் சோரன், கல்பனா ஜோடி, 200க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களை நடத்தி வாக்காளர்களை கவர்ந்தனர்.
இந்தாண்டு துவக்கத்தில், ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, கட்சி மூத்த தலைவராக இருந்த சம்பாய் சோரன் முதல்வர் ஆனார்.
கணவர் கைது செய்யப்பட்டதை அடுத்து தீவிர அரசியலுக்கு வந்த கல்பனா, கட்சி நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்கு சென்று விடாமல், அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார்.
பழங்குடியின மக்கள்
மாநிலம் முழுதும் சுற்றுப் பயணம் செய்து, கட்சி நிர்வாகிகளிடையே கலந்துரையாடி, அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தினார்.
டில்லியில் நடந்த, 'இண்டி' கூட்டணி கட்சிகள் கூட்டத்திலும் பங்கேற்று, தேசிய அளவில் கவனம் பெற்றார்.
மாநிலம் முழுதும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்களோடு மக்களாக பழகினார். குறிப்பாக, பழங்குடியின மக்களிடத்தில், அவர்களில் ஒருவராக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டார்.
கணவர் ஹேமந்த் சோரன் சிறையிலிருந்த ஆறு மாத காலத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்ட கல்பனா, குடும்ப அரசியல் என பா.ஜ., வைத்த விமர்சனத்தை கண்டு கொள்ளாமல், அயராது பணியாற்றினார்.
அமைச்சர் வாய்ப்பு?
சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர், ஜார்க்கண்டில் ஊடுருவல்காரர்கள் அதிகரித்து விட்டதாகவும், பழங்குடியினரின் நிலங்களை அவர்கள் அபகரித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினர். இந்த குற்றச்சாட்டையே பா.ஜ., முன்னிறுத்தியது.
இதை எல்லாம் தவிடுபொடியாக்கிய முதல்வர் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா, பா.ஜ.,வின் குற்றச்சாட்டுகளை துாள்துாளாக்கி பழங்குடியினரிடையே அனுதாப அலையை உருவாக்கி, ஜார்க்கண்டில் மீண்டும் வெற்றி காட்டி நாட்டியுள்ளனர்.
கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த கல்பனா, பொதுக்கூட்டங்களில் அரசியல் உரைகளாக அல்லாமல், பழங்குடியின பெண்களைச் சென்று சேரும் வகையில் எளிமையாக பேசினார்.
ெஹலிகாப்டரில் சென்று அவர் பிரசாரம் செய்ததை எதிர்க்கட்சியினர், 'ெஹலிகாப்டர் மேடம்' என, கிண்டலடிக்கவும் செய்தனர்.
முதல்வர் ஹேமந்த் சோரன் மீண்டும் ஆட்சியை தக்கவைப்பதற்கு, கல்பனா முக்கிய காரணம். இதை அங்கீகரிக்கும் வகையில், அமைச்சரவையில் அவருக்கு பொறுப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது
- நமது சிறப்பு நிருபர் -.