உண்மையை மறைத்து பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு ஐகோர்ட் ரூ.1 லட்சம் அபராதம்
உண்மையை மறைத்து பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு ஐகோர்ட் ரூ.1 லட்சம் அபராதம்
UPDATED : ஆக 10, 2025 07:01 AM
ADDED : ஆக 10, 2025 07:00 AM

சென்னை:தகவல்களை மறைத்து, பொது நல வழக்கை தவறாக பயன்படுத்திய, கடலுாரை சேர்ந்தவருக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
கூழாங்கற்கள் கடலுார் மாவட்டம் சின்னகண்டியன் குப்பத்தைச் சேர்ந்த எம். செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்த மனு: கடலுார் மாவட்டம் காட்டுக்கூடலுார் சாலை பகுதியை சேர்ந்த ஜெ.கார்த்திகேயன் என்பவர், நதியாபட்டு கிராமத்தில் உள்ள நிலத்தில் இருந்து கூழாங்கற்களை வெட்டியெடுக்க, குத்தகை உரிமம் பெற்றுள்ளார்; உரிமம் பெற்ற நிலத்தில் கூழாங்கற்கள் எதுவும் இல்லை.
தன் அரசியல் பலத்தால், அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து, அனுமதி பெற்றுள்ள நிலத்துக்கு அருகிலுள்ள பகுதிகளில் இருந்து, சட்டவிரோதமாக செம்மண், கூழாங்கற்களை, கார்த்திகேயன் வெட்டி எடுக்கிறார்.
சட்டவிரோத குவாரி நடவடிக்கை, அதற்கு துணை போகும் அதிகாரிகள் மீது, பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதேபோல கள்ளக் குறிச்சி மாவட்டத்தில், பச்சைவெளி, பூக்கிழனுார், அரிநத்தம், கூட்டாடி கிராமங்களிலும், கார்த்திகேயன் சட்டவிரோத குவாரி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட, கூடுதலாக கற்களை வெட்டி எடுக்கிறார். அவரின் சட்ட விரோத நடவடிக்கையால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. சட்டவிரோத குவாரி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும், 'மாபியா'வால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, புவியியல் மற்றும் சுரங்க துறை செயலர், ஆணையர் மற்றும் லஞ்ச ஒழிப்பு துணை இயக்குநர் ஆகியோர் விசாரணை நடத்தி, கார்த்திகேயன், அவருக்கு துணை போன அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதி பதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது .
அப்போது, புவியியல் மற்றும் சுரங்கத்துறை செயலர் தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் ஸ்டாலின் அபிமன்யு, லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், கூடுதல் அரசு வழக்கறிஞர் ஏ.கோகுல கி ருஷ்ணன் ஆஜராகி, கடலூர் கலெக்டரின் அறிக்கை யை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அரசு தரப்பில், இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களை பார்க்கும் போது, அதிர்ச்சி அளிக்கிறது. மனுதாரர் குற்றம்சாட்டிய நபர், உரிய அனுமதி பெற்று குவாரி நடத்தி வருவது தெரியவருகிறது.
ஆனால், மனுதாரர் தன் சொந்த நலனுக்காக, பொது நல வழக்கை துஷ்பிரயோகம் செய்து, அதை தவறாகப் பயன் படுத்தியுள்ளார் என்பது தெரிகிறது.
ஏனெனில், கடந்தாண்டு நவம்பரில், மனுதாரர் சட்டவிரோதமாக கனிம வளங்களை கடத்தியதாக, அவர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம், விருத்தாசலம் எஸ்.ஐ.,யால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
அது மட்டுமல்ல, அவதுாறு கருத்துகளை வெளியிட்டதாக கூறி, மனுதாரர் செல்வகுமார் மீது, கார்த்திகேயன் அளித்த புகாரில், மார்ச் 16ல்வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சந்தேகம் இந்த விபரங்களை எல்லாம் மறைத்து, பொது நல மனுவை, மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். இந்த செயல், நம்பகத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
தன் சொந்த காரணங்களுக்காக, பொது நல வழக்கை தவறாக பயன்படுத்திய மனுதாரரருக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம். இந்த தொகையை, ஒரு மாதத்துக்குள் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவிடம் செலுத்த வேண்டும். இல்லையெனில், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.