மயானத்துக்கு உரிமை கோரும் வக்ப் கலெக்டருக்கு 'ஐகோர்ட் நோட்டீஸ்'
மயானத்துக்கு உரிமை கோரும் வக்ப் கலெக்டருக்கு 'ஐகோர்ட் நோட்டீஸ்'
ADDED : டிச 30, 2025 07:59 AM

சென்னை: ஈரோட்டில் உள்ள பனகஹள்ளி கிராம மயானத்துக்கு, வக்ப் வாரியம் உரிமை கொண்டாடுவதை எதிர்த்து மனுவுக்கு, மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பசவராஜு என்பவர் தாக்கல் செய்த மனு: மாவட்டத்தில் உள்ள பனகஹள்ளி, பாளையம் ஆகிய கிராமத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள சர்வே எண் 99/2 என்பது அரசு நிலம். இது, மயானம். ஹிந்துகளுக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த 1800ம் ஆண்டு முதல் மயானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தகுந்த ஆவணங்கள் இல்லாமல், தற்போது வக்ப் வாரியம் சொந்தம் கொண்டாடுகிறது.
எந்தவொரு விசாரணையும் நடத்தாமல், தாசில்தார் மற்றும் காவல்துறை உதவியுடன், கிராம மக்கள் மயானத்தை பயன்படுத்த முடியாதவாறு, வேலி அமைத்து உள்ளனர். மனு அளித்தும், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மயானத்தை மீட்டு, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படி, மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ., உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் எஸ்.செந்தில்குமார் ஆஜராகி, ''கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக, கிராம மக்கள் மயானமாக பயன்படுத்துகின்றனர். அரசுக்கு சொந்தமான அந்த நிலத்தை, தகுந்த ஆவணங்கள் இல்லாமல், திடீரென வக்ப் வாரியம் சொந்தம் கொண்டாடுகிறது,'' என்றார்.
இதைப் பதிவு செய்த நீதிபதி, இந்த மனுவுக்கு, ஈரோடு மாவட்ட கலெக்டர், கோவை வக்ப் வாரிய கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜன.22ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும் தன் உத்தரவில், இந்த இடைப்பட்ட காலத்தில், கிராமத்தில் ஏதேனும் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் யாரேனும் உயிரிழந்தால், அந்த மரணம் தொடர்பாக, உடனே ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகா தாசில்தாருக்கு தெரிவிக்க வேண்டும்.
அவர் உடனே நேரில் சென்றோ அல்லது அதிகாரி ஒருவரை அனுப்பியோ, மனுதாரரால் கோரப்பட்டபடி, உடலை அடக்கம், தகனம் செய்வதற்கான இடத்தை அடையாளம் காண வேண்டும்.விசாரணையில், அடையாளம் காணப்பட்ட இடத்தில், உடல்கள் பாரம்பரிய முறைப்படி அடக்கம் அல்லது தகனம் செய்யப்படுகிறது என்பது தெரியவந்தால், அதிகாரிகள் தங்கள் விசாரணைக்கு ஏற்ப, அந்தந்த இடங்களில் உடலை அடக்கம் செய்யப்படுவதையோ அல்லது தகனம் செய்யப்படுவதையோ உறுதி செய்ய வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.

