கோவிலுக்கு சொந்தமில்லாத இடத்தில் சடங்குகள் புரோகிதர்களை தடுக்கக்கூடாது என ஐகோர்ட் உத்தரவு
கோவிலுக்கு சொந்தமில்லாத இடத்தில் சடங்குகள் புரோகிதர்களை தடுக்கக்கூடாது என ஐகோர்ட் உத்தரவு
ADDED : மார் 09, 2025 07:06 AM

சென்னை: 'கோவில் வளாகத்துக்கு வெளியே, சடங்குகள் மற்றும் மந்திரங்களை நன்கறிந்த புரோகிதர்கள், பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதை தடுக்கக்கூடாது' என, அறநிலையத் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த, புரோகிதர் பி.கார்த்திகேயன் தாக்கல் செய்த மனு: பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் அருகே, பூஜைகள் மற்றும் பரிகாரங்களை, கடந்த எட்டு ஆண்டுகளாக செய்து வருகிறேன். சடங்குகள் செய்வதற்குரிய தகுதியை கொண்டுள்ளேன்.
தென்னிந்தியாவின் திருவேணி சங்கமம் என நம்பப்படும் இந்த இடம், ஹிந்துக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. குறிப்பாக, ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில், பித்ரு பரிகாரம், நவக்கிரக தோஷம் செய்ய இந்த இடம் உகந்தது.
சங்கமேஸ்வரர் கோவிலுடன், எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அவ்வாறு இருக்கும் போது, கோவிலின் நிர்வாக அதிகாரி, என்னை தேடி வரும் பக்தர்களுக்கு, பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்யக்கூடாது என்று தடுக்கிறார். இவ்வாறு தடுக்க, அறநிலையத்துறை சட்டத்தில் விதிகள் இல்லை.
கடந்த ஏப்., 24 முதல், கோவில் நிர்வாக அதிகாரி, புரோகிதம் செய்வதை தடுத்து வருகிறார். இது தொடர்பாக, கடந்த மே மாதம் 30ல் அளித்த மனுவை பரிசீலிப்பதோடு, புரோகிதம் செய்வதை தடுக்க, கோவில் நிர்வாக அதிகாரிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அறநிலையத்துறை தரப்பில், வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் வாதாடியதாவது: கோவில் வளாகத்திற்குள் நடக்கும் பூஜைகளை ஒழுங்குப்படுத்துவது, கோவில் நிர்வாக அதிகாரியின் கடமை. தகுதி பெறாத, அங்கீகரிக்கப்படாத நபர்கள், பக்தர்களை ஏமாற்ற அனுமதிக்க முடியாது.
முறையான சடங்குகள் நடத்தப்படுவதையும், மந்திரங்கள் மற்றும் பிற சடங்குகள் குறித்து, போதுமான அறிவு பெற்றிருக்கின்றனரா என்பதை உறுதிசெய்த பிறகு தான், புரோகிதர்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றன. அவர்களை சடங்குகள் செய்ய அனுமதிக்கிறோம். கோவில் வளாகத்துக்குள், கோவில் சார்ந்த நிலங்களில், அனுமதி பெற்றவர்கள் தவிர, வேறு எவரும் சடங்குகள் செய்ய அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் வாதாடினார்.
பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கோவிலில் வழிபாடு, சடங்கு செய்ய விரும்பும் பக்தர்களை, அங்கீகரிக்கப்படாத நபர்கள் ஏமாற்ற அனுமதிக்க முடியாது என்பதில், எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. கோவில் வளாகம் மற்றும் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் நடக்கும் பூஜை, சடங்கை ஒழுங்குப்படுத்த கோவில் நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு.
ஆனால், உரிய தகுதி பெற்றிருக்கும் புரோகிதர்களை வைத்து, பக்தர்கள், கோவில் வளாகத்திற்கு வெளியே, பூஜைகள் மற்றும் பரிகாரங்களை செய்யும்போது, அதில் அறநிலையத்துறை தலையிட தேவையில்லை.
மனுதாரரை போன்ற நபர்கள், கோவிலின் ஒப்புதல் பெற்ற பின்னரே, பூஜைகள் மற்றும் பரிகாரங்களை செய்ய வேண்டும் என்று கூறுவது, கோவில் அதிகாரிகளின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது.
மனுதாரர் போன்றோர், கோவிலுடன் தொடர்புடையவர்கள் என்று கூறிக்கொள்ளாத வரை, கோவிலுக்கு சொந்தமில்லாத, வேறு எந்த நிலத்திலும், தாங்களாகவே காரியங்களை செய்யும் போது, அதில் கோவில் அதிகாரிகள் தலையிடத் தேவையில்லை.
அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே, கோவிலுக்குள் பூஜை, சடங்குகளை நடத்துகின்றனர் என்ற அறிவிப்பு பலகையை, அறநிலையத்துறை வைக்க வேண்டும். மனு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

