ADDED : ஜன 05, 2025 04:07 AM

புதுடில்லி: நாடு முழுதும், 23,000 கி.மீ., துார ரயில் பாதைகள், மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடிய அதிவேக ரயில்கள் இயக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ரயில்வே துறையை நவீனப்படுத்தும் மற்றும் மேம்படுத்தும் முயற்சிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகின்றன.
பயணத்துக்கான நேரத்தை குறைக்கும் வகையில் அதிக வேகத்தில் ரயில்களை இயக்கும் வகையில் ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், சிக்னல்கள் அமைப்பது உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த வகையில், நாட்டின் மொத்த ரயில் பாதையில் 20 சதவீதம், மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக ரயில்களை இயக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியுள்ளதாவது:
நாடு முழுதும், 1.03 லட்சம் கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதைகள் உள்ளன. இவற்றில், 23,000 கி.மீ., பாதைகள், 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், 54,337 கி.மீ., ரயில் பாதைகள், 110 கி.மீ., வேகத்தில் இயக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக ரயில் பாதைகளை மாற்றுவது, சிக்னல்களை மேம்படுத்துவது, கால்நடைகளால் தடை ஏற்படுவதை தடுக்க வேலி அமைப்பது போன்ற பணிகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, நடப்பு நிதியாண்டில், ஏப்., - டிச., காலகட்டத்தில், ரயில்வேயின் மூலதன செலவு, முந்தைய ஆண்டைவிட 2 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் வருவாய், 4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

