ADDED : மார் 03, 2024 05:36 AM

ஹிமாச்சல் பிரதேசத்தில் ராஜ்யசபா காங்., வேட்பாளர் தோற்ற பின், சுக்விந்தர் சுகு தலைமையிலான காங்., அரசு கவிழ்ந்து விடும் என, அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதிருப்தி காங்., - எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்; இதனால் காங்., அரசு பிழைத்தது.
ஆனால், பிரச்னை ஓய்ந்த பாடாக இல்லை. ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரசை வளர்த்தவர், மறைந்த முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங். இவரது மனைவி, பிரதிபா சிங்.
சட்டசபை தேர்தலில் காங்., வெற்றி பெற்ற போது, முதல்வர் பதவி கிடைக்கும் என, அவர் எதிர்பார்த்தார்; ஆனால், பிரியங்காவிற்கு நெருக்கமான சுக்விந்தர் சிங் சுகு முதல்வரானார். பிரதிபா சிங் ஹிமாச்சல மாநில காங்., தலைவராகவும் உள்ளார்.
சுக்விந்தருக்கு எதிராக பல எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி எழுப்பியுள்ளனர். தற்போது முதல்வரை மாற்றினால் பிரச்னை பெரிதாகும் என்பதால், காங்., எதுவும் செய்யாமல், தேர்தல் முடியட்டும் என, காத்திருக்கிறது.
பா.ஜ.,வும், 'இப்போது அமைதியாக இருப்போம். இன்னும் மூன்று மாதங்களில் தேர்தல் முடிந்து விடும்; அப்போது பார்த்துக் கொள்வோம்' என, அமைதியாக உள்ளது.
லோக்சபா தேர்தல் முடிந்தவுடன், ஹிமாச்சல காங்., அரசு நீடிப்பது சந்தேகம் என்பது, அரசியல் நோக்கர்களின் கருத்து. வடமாநிலங்களில், காங்., ஆட்சி செய்யும் ஒரே மாநிலம் ஹிமாச்சல பிரதேசம் தான்; அதுவும் போனால் காங்கிரசின் நிலை மிக பரிதாபம் தான்!
