ஹிந்துக்கள் சிறுபான்மையினராக கூடாது; தமிழ்நாடு வி.ஹெச்.பி., தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி பேச்சு
ஹிந்துக்கள் சிறுபான்மையினராக கூடாது; தமிழ்நாடு வி.ஹெச்.பி., தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி பேச்சு
UPDATED : ஆக 30, 2025 08:06 AM
ADDED : ஆக 30, 2025 08:05 AM

திருப்பூர்: ''ஹிந்துக்கள் நாட்டில், ஹிந்துக்கள் சிறுபான்மையினராகி விடக்கூடாது,'' என, திருப்பூரில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி பேசினார்.
தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், திருப்பூரில் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நேற்று நடந்தது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 82 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. ஸ்ரீநகர் பகுதியில் துவங்கிய ஊர்வலம் பல்வேறு பகுதிகள் வழியாக ஆலாங்காடு வந்தடைந்தது.
அங்கு நடந்த விழாவில், ஊர்வலத்தை துவங்கி வைத்து, மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி பேசியதாவது:
எந்த தடையையும் தகர்த்தெறிபவர் விநாயகர். இந்த விழாவுக்கு தடை போட யாராலும் முடியாது. எவ்வளவு தடை வந்தாலும் விழா சிறப்பாக நடைபெறும். விநாயகர் எந்த அமைப்புக்கோ, எந்த தனி நபருக்கோ மட்டும் சொந்தமானவர் இல்லை. அனைத்து ஹிந்து அமைப் புகளுக்கும் விழா நடத்த உரிமை உள்ளது.
மாநிலம், மொழி, ஜாதி என பிரிந்து கிடக்கும் ஹிந்துக்களை ஒன்றிணைப்பது தான் ஹிந்து அமைப்புகளின் பணி. ஹிந்துக்களை ஹிந்துக்களாக இருக்க வைப்பதும் கடமை. அமைப்புகளுக்குள் பிளவு ஏற்படுத்த வேண்டும் என யாரும் நினைக்க வேண்டாம். ஒரு அமைப்பால் மற்றொரு அமைப்பை அழிக்க முடியாது.
ஈ.வெ.ரா., விநாயகர் சிலைகளை உடைத்தார்; கடவுளை மறுத்தார். ஆனால், இன்று தமிழகத்தில் 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடக்கிறது.
மாநிலத்தில் பெரிய விழாவாக இது நடக்கிறது. வங்கதேசம், பர்மா என பல பகுதிகளிலிருந்தும் திருப்பூர் வந்து வேலை செய்கின்றனர்.
கேரளாவில் ஐந்து மாவட்டங்களில் ஹிந்துக்கள் சிறுபான்மையாக உள்ளனர். இந்நிலை நீடித்தால், ஹிந்து நாட்டில் ஹிந்துக்கள் சிறுபான்மையாகி விடுவர். இந்நிலை தமிழகத்துக்கு ஏற்படக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.