பா.ஜ., கூட்டணியில் பழனிசாமி பம்மியதற்கு அவரது மகன் மிதுனே சாட்சி: ஆர்.எஸ்.பாரதி
பா.ஜ., கூட்டணியில் பழனிசாமி பம்மியதற்கு அவரது மகன் மிதுனே சாட்சி: ஆர்.எஸ்.பாரதி
ADDED : ஏப் 30, 2025 01:34 AM

சென்னை: 'பா.ஜ., கூட்டணியில் பழனிசாமி பம்மியதற்கு, அவரது மகன் மிதுனே சாட்சி' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
சட்டம் - ஒழுங்கு குறித்து சட்டசபையில், பழனிசாமி சொன்ன பொய் குற்றச்சாட்டுகளை, முதல்வர் புள்ளி விபரங்களுடன் தோலுரித்தார்.
பதினொரு தோல்வி
பொல்லாத ஆட்சிக்கு, பொள்ளாச்சியே சாட்சி. துயரங்களை கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு, துாத்துக்குடி துப்பாக்கி சூடே சாட்சி.
அவமான ஆட்சிக்கு, அ.தி.மு.க., ஆட்சியே சாட்சி என, அடிமை அ.தி.மு.க.,வின் அவல ஆட்சி குறித்து, முதல்வர் சொன்ன உண்மைகளுக்கு, பதில் சொல்ல திராணி இல்லாமல், பழனிசாமி வழக்கம்போல, தி.மு.க.,வை வசைபாட கிளம்பி இருக்கிறார்.
'கரப்ஷன்' ஆட்சி நடத்திய பழனிசாமி, அடுத்த வெர்ஷன் பற்றியெல்லாம் பேசலாமா? பா.ஜ., கூட்டணியில் சேர்ந்தபோதே, அ.தி.மு.க.,வின் வெர்ஷன் முடிந்து விட்டது. கூட்டணி ஆட்சி என சொன்னபோதே, பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது.
அவரது குடும்பமே முடிவுரை எழுதிவிட்டது. பா.ஜ., கூட்டணியில் பழனிசாமி பம்மியதற்கு, அவரது மகன் மிதுனே சாட்சி.
தேர்தலுக்கு முன்பே, மக்கள் தங்களுக்கு அளிக்கப்போகும் படுதோல்வியை மறைக்க, விரக்தியில் கேலிக்கூத்துகளை செய்து கொண்டிருக்கிறார்.
அடிமை ஆட்சிக்கு அ.தி.மு.க.,வே சாட்சி. அதற்கு மக்கள் தொடர்ச்சியாக, அ.தி.மு.க.,வுக்கு பரிசளித்த, பதினொரு தோல்விகளே சாட்சி.
கோமாளிக்கூத்து
தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும், பா.ஜ.,வின் காலடியில் வீழ்ந்து கிடந்து, அடிமை அரசியல் செய்து வரும் பழனிசாமியை, 2026 தேர்தலில் மக்கள் தோற்கடித்து, ஓட வைக்கப்போவது உறுதி.
தமிழகத்தை ஆதிக்கம் செய்ய நினைக்கும் பா.ஜ.,வுக்கும் அதன் அடிமை அ.தி.மு.க.,விற்கும், தமிழக மக்கள் 2026-ம் ஆண்டின் தேர்தலிலும் 'கெட் - அவுட்' சொல்லப்போவது உறுதி.
இப்போது இருக்கிற 66 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ-.,க்கள் எண்ணிக்கையில், 2026-ல் 6 கிடைத்தால் அதுவே பெரிது என்ற நிலை உருவாகப் போகிறது.
'திராவிட மாடல் 2.0' அமையப்போகும் வயிற்றெரிச்சலில், பழனிசாமி செய்யும் கோமாளி கூத்துகளைப் பார்த்தால், பரிதாபம்தான் வருகிறது.
அவர் அரசியலின் கரும்புள்ளி. இனி எந்த காலத்திலும், தமிழகத்தில் ஆட்சியை மட்டுமல்ல; தமிழக மக்களின் மனங்களையும், அவர் நெருங்கவே முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

