ADDED : மார் 04, 2024 05:09 AM

மஹா சிவராத்திரி விழாவிற்கு தேசிய அளவில், 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் மஹாசிவராத்திரி அன்று, சிவன் கோவில்களில் மட்டுமின்றி குலதெய்வக் கோவில்களில் பெரும்பாலான ஹிந்துக்கள் திரண்டு வழிபடுவர்.
கடந்த முறை ஆட்சியில் இருந்த பழனிசாமி, தைப்பூசத்திற்கு விடுமுறை அளித்ததால், ஹிந்துக்களின் மத்தியில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதனால் அவரது பாணியில், ஹிந்துக்களின் ஆதரவைப் பெருமளவில் அள்ளுவதற்கு வசதியாக இந்த முறை மஹா சிவராத்திரிக்கு அரசு விடுமுறை அறிவிக்கலாம் என தி.மு.க.,வில் உள்ள ஆன்மிகவாதிகள் கட்சித் தலைமைக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே மஹா சிவராத்திரி விழாவை, ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு பிரமாண்ட விழாவாக கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறார். வரும் 8ல் மஹா சிவராத்திரி வருகிறது. அதனால் இந்த ஆண்டில் இருந்து அரசு விடுமுறை அளித்து, தி.மு.க., மீதான ஹிந்து விரோத முத்திரையையும் அகற்றவும், அதன் வாயிலாக ஹிந்து ஓட்டுகளை முழுமையாகப் பெறவும் தி.மு.க., தலைமை திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.
- நமது நிருபர்- -

