தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ஓசூர் சென்டிமென்ட்: ஒதுங்கிய ஸ்டாலின்

ஓசூர் சென்டிமென்ட்: ஒதுங்கிய ஸ்டாலின்

ஓசூர் சென்டிமென்ட்: ஒதுங்கிய ஸ்டாலின்

14


ADDED : ஏப் 17, 2026 06:31 AM

Follow on GoogleFavourite on Google

14

ADDED : ஏப் 17, 2026 06:31 AM


14
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓசூர் தொகுதி சென்டிமென்டை தி.மு.க., நம்புவதால், வேப்பனஹள்ளி தொகுதியில் தேர்தல் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டசபை தொகுதியில், தி.மு.க.,விற்கு தனியாக ஒரு 'சென்டிமென்ட்' உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின், ஓசூர் சட்டசபை தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த காலங்களில், வேட்பாளர்கள் வெற்றி - தோல்வியை தாண்டி, அக்கட்சி ஆட்சி அமைக்கவில்லை. பிரசாரம் செய்ய வராத தேர்தல்களில் ஆட்சியை பிடித்துள்ளது.

கடந்த 1991ல், தி.மு.க., கூட்டணி பலத்துடன் போட்டியிட்ட ஜனதா தள் வேட்பாளர் வெங்கடசாமியை ஆதரித்து கருணாநிதி பிரசாரம் செய்தார்.

கடந்த 2001 தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் வெங்கடசாமிக்கு ஆதரவாகவும், 2011ல், காங்., வேட்பாளர் கோபிநாத்திற்கு ஆதரவாகவும் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். இந்த தேர்தல்களில், தி.மு.க., ஆட்சி அமைக்கவில்லை.

கடந்த 2019ல், தமிழகத்தில் 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. அதில் ஓசூரும் ஒன்று. அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தி.மு.க., ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

அதை மனதில் வைத்து, ஓசூர் தொகுதியில் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். தி.மு.க., வேட்பாளர் சத்யா வெற்றி பெற்றார். ஆனால், தமிழக அளவில், தி.மு.க.,வால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.

அதாவது, 1989, 1996, 2006, 2021 சட்டசபை தேர்தல்களில், கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் ஓசூர் பிரசாரத்திற்கு வரவில்லை. அத்தேர்தல்களில், தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

அதனால், ஓசூர் தொகுதியில் பிரசாரம் செய்தால் ஆட்சியமைக்க முடியாது என்ற, 'சென்டிமென்ட்' உள்ளது. இத்தேர்தலில், முதல்வர் ஸ்டாலின் வரும் 19ம் தேதி ஓசூரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக பல்வேறு இடங்கள் பார்க்கப்பட்டு, கடைசியில் வேப்பனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட கோபசந்திரம் தட்சிண திருப்பதி கோவில் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

ஓசூர் பகுதி, 'சென்டிமென்ட்' காரணமாக, வேப்பனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இடத்தை தேர்வு செய்துள்ளதாக தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர்.

ஏனெனில், முதல்வர் ஸ்டாலின் தனி விமானம் மூலம், ஓசூர் அருகே பேலகொண்டப்பள்ளி 'தால்' நிறுவனத்திற்கு வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக கோபசந்திரம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் வரும் வழியில், ஓசூர் தொகுதிக்கு உட்பட்டு பல இடங்கள் பொதுக்கூட்டம் நடத்த ஏதுவாக உள்ளன. ஆனால், 'ஓசூர் சென்டிமென்ட்' காரணமாக, வேப்பனஹள்ளி தொகுதிக்கு பொதுக்கூட்டம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஸ்டாலின் பார்வையில் தஞ்சை பெரிய கோவில் கோபுரம் படக்கூடாது என்பதற்காக, அவருக்கு நேர் எதிரே திரை கட்டப்பட்டிருந்தது. அதையடுத்து தற்போது ஓசூர் சென்டிமென்ட்டும் பேசுபொருளாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us