கேரளாவில் பிரபலமாகி வரும் 'மேஜிக் அரிசி' சாதமாக மாற வெது வெதுப்பான தண்ணீர் போதும்
கேரளாவில் பிரபலமாகி வரும் 'மேஜிக் அரிசி' சாதமாக மாற வெது வெதுப்பான தண்ணீர் போதும்
ADDED : நவ 23, 2024 05:35 AM

பந்தலுார்: 'தமிழக- கேரள எல்லையில், வயநாடு சீரால் பகுதியில் விளையும், 'அகோனி போரா' என்ற நெல் ரகத்தில் விளையும் அரிசி, வெது வெதுப்பான தண்ணீரில் சாதமாகும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக - கேரள எல்லையில் உள்ள வயநாடு சீரால் என்ற பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி சுனில்குமார். இவர் தனது வயலில் பல நெல் ரகங்களை பயிரிட்டு வருகிறார். தற்போது, பஞ்சாப் மாநிலத்தில் பிரபலமான, 'அகோனி போரா' என்ற நெல் ரகத்தை தனது வயலில் அரை ஏக்கர் பரப்பில் விளைவித்துள்ளார்.
இந்த நெல் ரகத்தில், பொன்னிறமாக வரும் நெற்கதிர்கள் படிப்படியாக கருப்பு நிறத்துக்கு மாறுகிறது. ஒரு கிலோ நெல், 300 முதல் 400 ரூபாய் வரையிலும்; அரிசி கிலோவிற்கு, 500 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வகை அரிசியை, 'வெது வெதுப்பான தண்ணீரில் போட்டால் சாதமாகும்,' என்று விவசாயி தெரிவித்தார்.
இயற்கை விவசாயி சுனில்குமார் கூறுகையில்,''நாட்டில், 200-க்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் உள்ள நிலையில், எனது வயலில் தற்போது, பஞ்சாபில் விளைவிக்கும் 'அகோனி போரா' வகை ரகத்தை பயிரிட்டுள்ளேன். நன்றாக விளைந்துள்ளது. இந்த அரிசியை, வெது வெதுப்பான தண்ணீரில் போட்டால், 20 நிமிடத்தில் சாதம் தயாராகும். இதனை, வட மாநிலங்களில் நெடுந்துாரம் பயணம் செல்பவர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அரிய நெல் ரகத்தை பார்ப்பதற்கு, விவசாய கல்லுாரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், விவசாயிகள் எனது வயலுக்கு அடிக்கடி வருகின்றனர்,'' என்றார்.
கேரள மாநில, வயநாடு மாவட்ட அரசு வேளாண் துறை அலுவலர் அனுபமா கிருஷ்ணன் கூறுகையில், ''அகோனி போரா என்ற பெயரில் உள்ள இந்த ரகம், 'மேஜிக் அரிசி' என்றும் அழைக்கப்படுகிறது. அசாம் உட்பட நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில், அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. தற்போது, பஞ்சாப் பகுதியில் அதிக அளவில் விளைவிக்கப்படும் இந்த அரிசி, வெள்ளை, சிவப்பு, கருப்பு ஆகிய வண்ணங்களில் உள்ளது.
இதனை வெது வெதுப்பான தண்ணீரில் போட்டால், 20 நிமிடங்களில் மென்மையாக மாறி சாதம் தயாராகும். தற்போது இந்த அரிசி கிலோ, 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தென் மாநிலங்களில் முதன் முறையாக வயநாடு பகுதியில் இந்த அரிசி விளைந்துள்ள நிலையில், இந்த நெல் ரகத்தை உற்பத்தி செய்ய விவசாயிகள் பலர் முன் வந்துள்ளனர்,'' என்றார்.

