நடிகர் சயீபை குத்திய வங்கதேச நபர் நாட்டிற்குள் ஊடுருவியது எப்படி?
நடிகர் சயீபை குத்திய வங்கதேச நபர் நாட்டிற்குள் ஊடுருவியது எப்படி?
UPDATED : ஜன 22, 2025 04:04 AM
ADDED : ஜன 22, 2025 02:19 AM

மும்பை : மும்பையில் திருட்டு முயற்சியின் போது, 'பாலிவுட்' நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்திய வங்கதேச நபர், விஜய் தாஸ் என்ற போலி பெயரில் ஏழு மாதத்திற்கு முன் நாட்டிற்குள் ஊடுருவியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாந்த்ராவில், 'சத்குரு ஷரண்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், 54, வசித்து வருகிறார். நடிகர் சயீப் அலிகான் வீட்டுக்குள், கடந்த 16ம் தேதி அதிகாலை மர்ம நபர் புகுந்தார். சயீப் அலிகான் அவரை பிடிக்க முயன்ற போது கத்தியால் குத்தினார்.
இதில் படுகாயம்அடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐந்து நாள் சிகிச்சைக்கு பின் சயீப் நேற்று நலமுடன் வீடு திரும்பினார்.
இதற்கிடையே சயீபை கத்தியால் குத்திவிட்டு தப்பிய நபரை, கடந்த 19ம் தேதி மும்பை போலீசார் கைது செய்தனர். அவரின் பெயர் ஷரிபுல் இஸ்லாம் முகமது அமின் பக்கீர், 30, என்பதும், வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. அவரிடம் இருந்த மொபைல் போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: அமின் பக்கீர் மேகாலயாவில் இருந்து வங்கதேசத்திற்கு செல்லும் துவாகி நதி வழியாக, ஏழு மாதங்களுக்கு முன், சட்ட விரோதமாக நம் நாட்டிற்குள் ஊடுருவி உள்ளார். தன் பெயரை விஜய் தாஸ் என மாற்றியவர், மேற்கு வங்கம் சென்று, அங்கு வசிக்கும் ஒருவரின் ஆதார் அட்டையை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினார்.
வேலை தேடி மும்பை வந்தவருக்கு, ஒப்பந்த முறையில் பணியாளர்களை அனுப்பும் அமித் பாண்டே வேலை தந்துள்ளார். மும்பையின் வோர்லி மற்றும் தானே பகுதியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பப்புகளில் துாய்மை பணியாளராக வேலை பார்த்துள்ளார்.
வேலை நேரம் முடிந்த பின் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த அமின் பக்கீர், சம்பவத்தன்று சயீப் அலிகான் அபார்ட்மென்ட்டுக்கு திருடச் சென்று சிக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் வேறு யாரும் அமின் பக்கீருக்கு உதவியுள்ளனரா என விசாரித்து வருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர்.