UPDATED : செப் 07, 2025 03:17 PM
ADDED : செப் 07, 2025 03:03 PM

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், சென்னானுார் கிராமத்தில் நடத்தப்பட்ட கள ஆய்வில், மலைப் பகுதியில் புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்தன. இதையடுத்து, 2024ல் அகழாய்வுப் பணிகள் துவங்கப்பட்டு, கடந்த மே மாதம், அகழாய்வு இயக்குநர் சீ.பரந்தாமன் தலைமையில், முதல்கட்ட அகழாய்வுப் பணிகள் முடிந்துள்ளன.
எலும்பு கிழிப்பான்
ஒரு குழியில், 176 செ.மீ., ஆழத்தில் முழுமையான இரண்டு பானைகளும், பானைகள் உருளாமலும், சாயாமலும் இருக்கும் வகையில், அவற்றின் அடியில் வைக்கும் வட்ட வடிவ சுடுமண் பிரிமணைகள் இரண்டும் கிடைத்துள்ளன.இதே குழியில், எலும்பால் ஆன கிழிப்பான் ஒன்றும் கிடைத்துள்ளது. இது, விலங்குகளின் தோலைக் கிழிப்பது, உரோமங்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.இங்கு கிடைத்துள்ள சுடுமண் முத்திரையில், கூரான ஒரு புள்ளி மட்டும் உள்ளது. இது, மண்பாண்டங்களில், 'டிசைன்' செய்ய பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். அதாவது, ஈர களி மண்ணில் பானை செய்து முடித்ததும். அதன் மீது, தேவைப்படும் இடங்களில் இந்த முத்திரையை ஒற்றி எடுக்கும்போது, புள்ளிகள் விழும். அந்த மண்பாண்டத்தை சுட்ட பின், அது நிரந்தரமாகி விடும்.இங்குள்ள குழிகளின் மேல் அடுக்குகளில், இரும்பு கால பொருட்கள் கிடைத்துள்ளன. அவற்றில், ஏர் கலப்பையின் கொழுமுனை, அம்பு முனை, ஈட்டி முனை உள்ளிட்ட பொருட்கள் முக்கியமானவை.
முக்கியத்துவம்
பொதுவாக, தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட புதிய கற்கால வாழ்விடங்களில் ஒரு சில இடங்களைத் தவிர, அனைத்தும் புதிய கற்காலத்தின் இறுதி காலம் அல்லது இரும்பு காலத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்தவையாகவே உள்ளன.தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மெருகேற்றப்பட்ட வழவழப்பான கற்கோடாரி அதிக அளவில் தொல்லியல் கள ஆய்வில் கிடைத்தாலும், அக்கால மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகள் மற்றும் எலும்பால் ஆன கருவிகள் கிடைக்கவில்லை.இங்கு அவை கிடைப்பதால், புதிய கற்கால வாழ்விடம் என்பது உறுதியாகி உள்ளது. புதிய கற்காலத்திற்கு முந்தைய நுண்கற்கால சான்றுகளும் இங்கு கிடைத்துள்ளன. அதேபோல், புதிய கற்காலத்திற்கு பிந்தைய இரும்பு கால சான்றுகளும் கிடைத்துள்ளன. இவை, இந்த இடத்தில் தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளம். தமிழகத்தில் இதுபோன்ற தொடர்ச்சியான பண்பாட்டு மாற்றத்திற்கு வேறு எங்கும் ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
கருத்துகளை பரிமாற: naduvoorsiva@gmail.com