கவர்னரால் கடும் சோதனைகளை எதிர்கொண்டேன்; முதல்வர் ஸ்டாலின் வேதனை
கவர்னரால் கடும் சோதனைகளை எதிர்கொண்டேன்; முதல்வர் ஸ்டாலின் வேதனை
ADDED : ஜன 25, 2026 07:59 AM

சென்னை: ''அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எதிர்கொள்ளாத நெருக்கடிகளை, கவர்னரால் சந்தித்துள்ளேன். அவர்கள் காலத்தில் இருந்த கவர்னர்கள், முரண்பாடுகள் இதயத்தில் இருந்தாலும், அதை ரணமாக்கும் வகையில் செயல்பட்டதில்லை,'' என, முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்தார்.
முரண்பாடுகள்
சட்டசபையி ல்நேற்று தன் பதிலுரையில், முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: தமிழக நலனுக்காக செயல்பட வேண்டிய கவர்னர் ரவி, தமிழகத்திற்கு எதிராக, மக்களுக்காக பாடுபடும் அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதுதான், வேதனையாக இருக்கிறது. கவர்னர், தான் படிக்க வேண்டிய உரையை படிக்காமல் சென்றது வேடிக்கையாக இருக்கிறது.
தான் வகிக்கும் பதவியை அவர் அவமானப்படுத்துகிறார். இந்த நாட்டின் மீதும், தேசிய கீதம் மீதும் அளவற்ற பெரும் மதிப்பை, மரியாதையை கொண்டுள்ளவர்கள் நாங்கள். தேசிய ஒருமைப்பாட்டிலும், நாட்டு பற்றிலும் யாருக்கும் நாங்கள் குறைந்தவர்கள் இல்லை.
எனவே, யாரும் எங்களுக்கு தேச பக்தி குறித்து, பாடம் எடுக்கும் நிலைமையில் நாங்கள் இல்லை; தேச பக்தி பாடம் எடுக்கும் அளவுக்கு, தேசத்துக்காக அவர்கள் போராடியவர்களும் இல்லை. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேச வேண்டிய நான், இன்றைக்கு கவர்னருக்கு விளக்கம் அளித்து பேசும் நிலையில் இருக்கிறேன்.
அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எதிர்கொள்ளாத நெருக்கடி இது. அவர்கள் காலத்தில் இருந்த கவர்னர்கள் கூட, இப்படி இல்லை. முரண்பாடுகள் இதயத்தில் இருந்தாலும், அதை ரணமாக்கும் வகையில் செயல்பட்டதில்லை.
குற்றச்சாட்டு
அந்த வகையில், அதிகமான சோதனைகளை எதிர்கொண்டவனாக நான் இருக்கிறேன். என்னை பொறுத்தவரை சோதனைகள் எனக்கு புதிதல்ல. சோதனைகளை வென்று வளர்ந்தவன். என்னை சீண்டி பார்ப்பவர்கள், மனதிற்குள் மகிழ்ச்சி அடையலாமே தவிர, அது என்னை எதுவும் செய்யாது. தன்னுடைய உரையை வாசிக்காமல் வெளியேறியது ஏன் என, 13 குற்றச்சாட்டுகளுடன் ஒரு அறிக்கையை, கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில், 11.19 சதவீதம் அளவுக்கு, நாட்டிலேயே உயரிய பொருளாதார வளர்ச்சியை, தமிழகம் அடைந்துள்ளது. கடந்த 14 ஆண்டுகளுக்கு பின், இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழகம் மீண்டும் எட்டியிருக்கிறது. இதை சொல்வது நாங்கள் அல்ல. மத்திய அரசின் புள்ளியியல் துறை. கவர்னர் கேள்வி கேட்க வேண்டும் என்றால், அவரை இங்கே அனுப்பி வைத்த மத்திய அரசைதான் கேட்க வேண்டும்.
விருதுகள் மாநில கூட்டுறவு வங்கியின் சிறந்த சேவைக்காக, உள்துறை அமைச்சர் அமித் ஷா விருது வழங்கியுள்ளார். மத்திய அரசிடம் இருந்து மட்டும், 65க்கும் மேற்பட்ட விருதுகளை, தமிழக அரசு வாங்கி உள்ளது. இவ்வளவுக்கு பின்னும், கவர்னர் விமர்சிக்கிறார் என்றால், அவருடைய பார்வைதான் பழுதுபட்டதாக இருக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

