'அளப்பறிய அன்பை உணர்ந்தேன்' பிரதமர் சந்திப்புக்கு பின் நயினார்
'அளப்பறிய அன்பை உணர்ந்தேன்' பிரதமர் சந்திப்புக்கு பின் நயினார்
ADDED : ஏப் 30, 2025 03:37 AM

அவசர அழைப்பின் பேரில் டில்லி சென்ற தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், முருகன், பா.ஜ., அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் ஆகியோரை வரிசையாக சந்தித்தார்.
இந்நிலையில்தான், நேற்று பிரதமர் மோடியை, அவரது இல்லத்தில் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார்.
அப்போது பிரதமருக்கு, ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர் போன்ற நினைவுப் பரிசை நயினார் வழங்கினார்.
சந்திப்பில், தமிழக அரசியல் சூழல், அ.தி.மு.க.,வுடனான கூட்டணி குறித்தெல்லாம் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. பேச்சில், அரசியல் செயல்பாடுகள் குறித்து, பிரதமர் மோடி நயினார் நாகேந்திரனுக்கு அறிவுரையும், ஆலோசனையும் கூறியதாக தெரிகிறது.
பிரதமருடனான சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடியை, நேரில் சந்தித்துப் பேசியது, பெரிய மரியாதை மற்றும் பாக்கியம். அவரது ஒவ்வொரு வார்த்தை மற்றும் அசைவுகளில் இருந்து, தமிழக மக்கள் மீதான அவருடைய அளப்பறிய அன்பை உணர்ந்தேன்.
நமது பழமையான மற்றும் புகழுக்குரிய தமிழ் மொழியின் மீதான மரியாதையையும் உணர்ந்தேன்.
தர்மம் சார்ந்த உண்மையான வழியில், தமிழக மக்களுக்கும் நமது நாட்டிற்கும், சேவை செய்வதற்கான உறுதியான நிலைப்பாட்டை மென்மேலும் நிலைநிறுத்துவதற்கு, தமிழக பா.ஜ.,வின் சார்பில், அவரது ஆசிர்வாதத்தையும், வழிகாட்டுதலையும் பெற்றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-- நமது டில்லி நிருபர் -