அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்து தரிசிப்பேன்: துர்கா
அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்து தரிசிப்பேன்: துர்கா
ADDED : ஜன 15, 2024 03:08 AM

சென்னை: ''அயோத்தி ராமரை தரிசனம் செய்ய கண்டிப்பாக வருவேன்,'' என, ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகளிடம், முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா உறுதி அளித்துள்ளார்.
அயோத்தியில் குழந்தை ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடக்க உள்ளது.
பூஜிக்கப்பட்ட அட்சதை
ஆர்.எஸ்.எஸ்., மாநில நிர்வாகிகள் ராம ராஜசேகர், பிரகாஷ், விஷ்வ ஹிந்து பரிஷத் தேசிய இணைச்செயலர் நாகராஜன் உள்ளிட்டோர், நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்காவை, அவருடைய இல்லத்தில் சந்தித்தனர்.
அப்போது ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ், அயோத்தியில் பூஜிக்கப்பட்ட அட்சதை ஆகியவற்றை வழங்கினர்.
இது குறித்து, ஆர்.எஸ்.எஸ்., மாநில நிர்வாகி ராம ராஜசேகர் கூறியதாவது:
ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்கனவே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், முதல்வரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுக்க நேரம் கேட்டிருந்தோம். அதன்படி, நேற்று முன்தினம் 11:30 மணிக்கு முதல்வர் மனைவி துர்காவை சந்தித்து, அழைப்பிதழ் வழங்கினோம்.
சிறப்பு அம்சங்கள்
மிகவும் அன்புடன் எங்களை வரவேற்றார். பின், பக்தியுடன் கும்பாபிஷேக அழைப்பிதழ் பெற்று கொண்டார். ராமர் கோவில் எப்படி கட்டப்படுகிறது, அதன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து சுருக்கமாக எடுத்து கூறினோம்.
அதை ஆர்வமாக, அவர் கேட்டு கொண்டார். அவரும் ராமர் கோவில் பணிகள் தொடர்பாக சில விபரங்களை கேட்டார்.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நீங்கள் அவசியம் வர வேண்டும் என கேட்டுக் கொண்டோம்.
அயோத்தி ராமரை தரிசிக்க ஆவலாகத்தான் இருக்கிறேன். வசதிப்படும் நாளில் கட்டாயம் அயோத்திக்கு வந்து, ராமரை தரிசிப்பேன் என்றார். கும்பாபிஷேகத்துக்கான அழைப்பிதழை வீட்டு பூஜை அறையில் வைத்து கும்பிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.