காங்கிரஸ் விலகினால் ராமதாசுக்கு வாய்ப்பு; போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின் உறுதி
காங்கிரஸ் விலகினால் ராமதாசுக்கு வாய்ப்பு; போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின் உறுதி
UPDATED : ஜன 31, 2026 08:13 AM
ADDED : ஜன 31, 2026 05:30 AM

சென்னை: 'தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால், ராமதாஸ் தரப்பு பா.ம.க.,வுக்கு வாய்ப்பு வழங்கப்படும்' என, அக்கட்சி நிறுவனர் ராமதாசிடம், முதல்வர் ஸ்டாலின் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆலோசனை
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் அன்புமணி தரப்பு பா.ம.க., இணைந்து விட்டதால், அக்கூட்டணியில் ராமதாஸ் சேர முடியாத நிலை உள்ளது. தி.மு.க., கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எதிர்ப்பாலும், ராமதாஸ் எதிர்பார்க்கும் தொகுதிகளை தர முடியாத நிலை உள்ளதாலும், அவருக்கு இடம் மறுக்கப்பட்டது.
இதனால் , 'நடிகர் விஜயின் த.வெ.க., கூட்டணியில் சேரலாமா அல்லது பா.ம.க., வலுவாக உள்ள தொகுதிகளில் மட்டும் தனித்து போட்டியிடலாமா' என மகள் ஸ்ரீ காந்தி, கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோருடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். தனித்து போட்டியிடும் முடிவுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, தி.மு.க., கூட்டணிக்கு கடைசி வரை முயற்சிப்பது, இல்லையெனில் த.வெ.க., வுடன் சேருவது என முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, தி.மு.க., - எம்.பி., ஒருவர் வாயிலாக, அக்கட்சி தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுடன் மொபைல் போனில் ராமதா ஸ் பேசியுள்ளார். அப்போது, 'கருணாநிதியோடு அரசியல் செய்தவன் நான். அவரது நன்மதிப்பை பெற்றவன் என்பதை அறிவீர்கள். கடந்த 1989ல் இருந்து தேர்தல் களத்தில் இருக்கிறேன்; இருந்தாலும், இந்த தேர்தல் எனக்கு முக்கியமானது. 'சொல்லப்போனால், கடைசி தேர்தலும் கூட. எ னவே, தி.மு.க., கூட்டணியில் கவுரவமான இடத்தை வழங்க வேண்டும்' என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாய்ப்பு
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், 'தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு முடியவில்லை. காங்கிரசுக்கான இடங்கள் முடிவான பிறகு தான், புதிய கட்சிகளை இணைப்பது குறித்து யோசித்து பரிசீலிக்க முடியும்.
'இப்போதைக்கு கொஞ்சம் பொறுமையாக இருங்கள்; சரியான நேரம் வந்ததும், உங்களுக்கு வாய்ப்பு வழங்குகிறோம்' என கூறியதாக, ராமதாஸ் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதனால், தி.மு.க., தரப்பிடம் இருந்து, கூட்டணியில் இணையச் சொல்லி, எந்த நேரமும் தனக்கு அழைப்பு வரும் என்ற நம்பிக்கையில் ராமதாஸ் காத்திருப்பதாகவும் அந்த ஆதரவாளர் மேலும் கூறினார்.

