அ.தி.மு.க.,விலிருந்து வந்தால் மவுசா? ஒரிஜினல் உடன்பிறப்புகள் கொதிப்பு!
அ.தி.மு.க.,விலிருந்து வந்தால் மவுசா? ஒரிஜினல் உடன்பிறப்புகள் கொதிப்பு!
ADDED : ஜன 27, 2026 03:51 AM

சென்னை: 'அ.தி.மு.க.,விலிருந்து பலர் தி.மு.க.,வில் இணைந்து வருவதால், அ.தி.மு.க., அணியாக தி.மு.க., மாறி வருகிறது' என, ஒரிஜனல் உடன்பிறப்புகள் புகைச்சலில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் வென்று, எப்படியாவது ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற இலக்குடன் தி.மு.க., செயல்பட்டு வருகிறது.
நிர்வாகிகள் அதிருப்தி
அதற்காக, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ., புதுக்கோட்டை கார்த்திக் தொண்டைமான், முன்னாள் எம்.பி., மைத்ரேயன், பன்னீர்செல்வம் அணியில் இருந்த எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் என பலரையும் தி.மு.க.,வில் சேர்த்துக் கொண்டனர்.
அதன் உச்சமாக, பன்னீர்செல்வம் அணியில் இருந்த முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான வைத்திலிங்கம், கடந்த 21ல் தி.மு.க.,வில் இணைந்தார்; அதை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினை அழைத்து, தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் நேற்று ஆதரவாளர்கள் இணையும் பிரமாண்ட விழாவை நடத்தினார்.
அவ்விழாவில், அ.தி.மு.க., மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் என பலரும் தி.மு.க.,வில் இணைந்தனர். தங்களுக்கு எதிராக அரசியல் நடத்திய அ.தி.மு.க., நிர்வாகிகள், தி.மு.க.,வில் இணைந்து வருவதை, காலங்காலமாக அக்கட்சியில் இருக்கும் உடன்பிறப்புகள் ரசிக்கவில்லை.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், தி.மு.க., ஏற்கனவே வலுவாக உள்ளது. எனவே, அ.தி.மு.க.,வினரை சேர்த்தால், வெகு காலமாக கட்சியில் இருப்போர் புறக்கணிக்கப்படும் நிலை உருவாகும் என, நேரு, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட அமைச்சர்களிடம், தி.மு.க., நிர்வாகிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
அவர்களை சமாதானப்படுத்திய நேரு, 'வரும் தேர்தலில் தி.மு.க., வென்று ஆட்சி அமைக்காவிட்டால், மத்திய பா.ஜ., அரசு பல வழிகளில் நெருக்கடி கொடுக்கும். மோசமான நிலையை கட்சி எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
எனவே, கட்சியின் வெற்றிக்காக, வைத்திலிங்கம் உள்ளிட்டோரை முதல்வர் ஸ்டாலின் சேர்த்துள்ளார். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என கூறியதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அ.தி.மு.க.,வில் இருந்து வைத்திலிங்கம் போன்றோர் இணைவதால், தி.மு.க.,வுக்கு பெரிய பலன் கிடைக்காது; யார் கட்சியில் இணைகின்றனரோ, அவர்களுக்கு தான் பலன் கிடைக்கும்.
திண்டாட்டம்
எப்படியிருந்தாலும், வைத்திலிங்கத்திற்கு ஒரத்தநாடு தொகுதியை கொடுத்து விடுவர்; வென்றால், அமைச்சராகவும் ஆகி விடுவார். எங்கள் பாடு தான் திண்டாட்டம். கடந்த 2021ல் அமைந்த தி.மு.க., அமைச்சரவையில், வேலு, ராமச்சந்திரன், ரகுபதி, முத்துசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன், சேகர்பாபு, செந்தில் பாலாஜி என, முன்னாள் அ.தி.மு.க.,வினர் எட்டு பேர் அமைச்சர்களாயினர்.
இப்போது நடப்பதை பார்த்தால், அடுத்து தி.மு.க., அரசு அமைந்தால், அதில் பாதிக்கும் கூடுதலாக முன்னாள் அ.தி.மு.க.,வினரே இருப்பர். இதனால், அ.தி.மு.க.,வாகவே தி.மு.க., மாறி வருகிறது. தற்போதைய நிலையைப் பார்த்தால், தி.மு.க., என்னும் அ.தி.மு.க.,வை, ஒரிஜினல் அ.தி.மு.க., எதிர்த்து போட்டியிடும் சூழல் உருவாகி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

