போனால் போகட்டும்.. இருந்தால் இருக்கட்டும்! காங்கிரசுக்கு தி.மு.க., கைவிரிப்பு
போனால் போகட்டும்.. இருந்தால் இருக்கட்டும்! காங்கிரசுக்கு தி.மு.க., கைவிரிப்பு
ADDED : ஜன 09, 2026 05:21 AM

ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் உள்ளிட்ட காங்கிரஸ் நிபந்தனைகளை ஏற்க முடியாது என, தி.மு.க., திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில், 'போனால் போகட்டும்; இருந்தால் இருக்கட்டும்' என, தி.மு.க., மூத்த அமைச்சர், மூத்த எம்.பி., பேசிய தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டணி ஆட்சிக்கான கோரிக்கை, தி.மு.க., - அ.தி.மு.க.,வை தவிர, மற்ற கட்சிகள் மத்தியில் வலுவாக உள்ளது. அதற்கு காரணம், த.வெ.க., தலைவர் விஜய். கூட்டணி ஆட்சி அமைக்க தயாராக இருப்பதாக, அவர் சொன்னதில் இருந்து, தமிழக காங்கிரசார் அதை விடாமல் பிடித்து கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில், 'அ.தி.மு.க., தலைமையில் தனித்து ஆட்சி அமைக்கப்படும்' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி உறுதிபடக் கூறியிருக்கிறார். எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வே, கூட்டணி ஆட்சிக்கு பிடி கொடுக்காதபோது, ஆளும் கட்சியான தி.மு.க., எப்படி காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு தர முன்வரும் என, கேள்வி எழுப்புகின்றனர்.
இது தொடர்பாக, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி, அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும்; ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும். 'கட்சியை பலப் படுத்த வேண்டும் என காங்கிரசார் விரும்பலாம்; தி.மு.க., எப்படி விரும்பும்? ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என்ற நிபந்தனைகளை ஏற்க முடியாது என, காங்கிரசிடம் தி.மு.க., திட்டவட்டமாக தெரிவித்து விட்டது' என்றார்.
அதன் எதிரொலியாக தான், காங்கிரஸ் நிபந்தனையை விமர்சித்து, தி.மு.க.,வினர் பொது மேடைகளில் பேசத் துவங்கி உள்ளனர்.
சமீபத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற தி.மு.க., மூத்த எம்.பி., ஒருவர் பேசுகையில், 'ஆட்சியில் பங்கு கேட்கும் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தனித்து போட்டியிட முடியுமா; அப்படி போட்டியிட்டு வெற்றி பெற்றால், நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்' என்றார்.
ஆளும் கட்சியைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர், 'தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போனால் போகட்டும்; இருந்தால் இருக்கட்டும்' என, நிர்வாகிகள் கூட்டத்தில் அலட்சியமாக பேசியுள்ளார். இதையடுத்தே, ஜனநாயகன் பட விவகாரத்தில், விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்குமாறு, காங்கிரஸ் எம்.பி.,க்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
- நமது நிருபர் -

