எங்களுக்கு மாம்பழ சின்னம் தர மறுத்தால் நீதிமன்றத்தை அணுகுவோம்: ராமதாஸ் தரப்பு பா.ம.க., ஆவேசம்
எங்களுக்கு மாம்பழ சின்னம் தர மறுத்தால் நீதிமன்றத்தை அணுகுவோம்: ராமதாஸ் தரப்பு பா.ம.க., ஆவேசம்
ADDED : நவ 16, 2025 12:37 AM

திண்டிவனம்: 'ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.,விற்கு மாம்பழ சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்தால், நீதிமன்றத்தை அணுகுவோம்' என மாநில சமூக நீதி பேரவை தலைவர் கோபு தெரிவித்துஉள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில், வழக்கறிஞர் சமூக நீதி பேரவையின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, தலைமை நிலைய செயலர் அன்பழகன், மாநில சமூக நீதி பேரவை தலைவர் கோபு உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின், ராமதாசுக்கு ஆதரவு நிலைபாட்டில் இருக்கும் மாநில சமூக நீதி பேரவை தலைவர் கோபு அளித்த பேட்டி:
ராமதாஸ் உருவாக்கிய 34 அமைப்புகளில், சமூக நீதிப் பேரவையும் ஒன்று. இந்த அமைப்பு எப்போதும் ராமதாசுக்கு மட்டுமே கட்டுப்பட்டது.
சேலம் எம்.எல்.ஏ., அருளை, குண்டர் என அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு சேலம் மேற்கு தொகுதி மக்கள் பாலுவிற்கு சரியான பாடம் புகட்டுவர்.
பா.ம.க.,வின் மாம்பழ சின்னம், யாருக்கு சொந்தம் என்பது குறித்து இன்னும் தேர்தல் ஆணையம் இறுதி செய்யவில்லை.
பீஹார் தேர்தலில் நிற்கப் போவதாக கூறி, ராமதாசுக்கு தெரியாமல், அன்புமணி தரப்பினர், திருட்டுத்தனமாக தேர்தல் ஆணையத்தை அணுகி மாம்பழ சின்னம் கேட்டு உள்ளனர்.
மாம்பழ சின்னத்தை தனிப்பட்ட ஒருவர் சொந்தம் கொண்டாட முடியாது. பா.ம.க.,விற்குதான் தேர்தல் ஆணையம் மாம்பழ சின்னம் வழங்கியுள்ளது.
ராமதாஸ் வாயிலாக தேர்தல் ஆணையத்தை அணுகி, மாம்பழ சின்னத்தை முன்னுரிமை அடிப்படையில் வழங்கக்கோரி முறையிட்டுள்ளோம்.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரித்து, யாருக்கு மாம்பழ சின்னம் வழங்குவது என முடிவு எடுக்கும்.
ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.,விற்கு மாம்பழ சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்தால், நீதிமன்றத்தை அணுகுவோம்.
இவ்வாறு கோபு கூறினார்.

