நல்லது செய்தால் மக்கள் நமக்கு ஓட்டளிப்பர்: பிரதமர் நரேந்திர மோடி
நல்லது செய்தால் மக்கள் நமக்கு ஓட்டளிப்பர்: பிரதமர் நரேந்திர மோடி
UPDATED : அக் 11, 2024 05:29 AM
ADDED : அக் 11, 2024 01:33 AM

“மத்திய அரசு நல்ல திட்டங்களை நிறைவேற்றியதன் பிரதிபலிப்புகள், சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் தெரிகின்றன. மக்களுக்கு நல்லது செய்தால், அவர்கள் நமக்கு ஓட்டளிப்பர் என்பது உறுதியாக தெரிகிறது,” என, மத்திய அமைச்சர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ஜம்மு - காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் கலந்துரையாடினார்.
வரவேற்பு
இந்த கூட்டத்திற்கு பிரதமர் வந்தபோது, அமைச்சர்கள் அனைவரும் எழுந்து நின்று ஹரியானா தேர்தல் வெற்றிக்காக கைகளை தட்டி, வாழ்த்து தெரிவித்து வரவேற்பு தந்தனர். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி, 30 நிமிடங்கள் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: மக்களுக்கு தேவையான நல திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதில் அமைச்சர்கள் குறியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு திட்டமும் கடைசி மனிதனுக்கும் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்.
மக்களின் சக்திதான் மகத்தானது; அந்த சக்தியின் ஆதரவை பெற்றதால்தான், தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சி அதிகாரத்தை நம்மிடம் தர வேண்டுமென்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டது.
நாம் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருக்கிறோம் என்றால், அது மக்களுக்கு சேவை செய்வதற்காக மட்டுமே என்பதை நினைவில் வைத்து செயல்படுங்கள். மக்களுக்கு நல்லது செய்தால், நிச்சயம் நமக்கு ஓட்டளிப்பர்.
மத்திய அரசு நல்ல திட்டங்களை நிறைவேற்றியதன் பிரதிபலிப்புகள், நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகளில் நன்றாகவே தெரிகின்றன. உங்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள, 'ஆஸ்பிரேஷனல் டிஸ்ட்ரிக்ட்ஸ்' எனப்படும் 'வளர்ச்சி குறிக்கோள் எட்ட வேண்டிய மாவட்டங்களுக்கு' பயணம் செய்யுங்கள். அங்கு ஒவ்வொரு விஷயத்தையும் நேரடியாக பார்வையிடுங்கள்.
சரியான தகவல்கள்
குறைந்தது, 48 மணி நேரமாவது அங்கு தங்கி, கீழ்மட்ட அளவிலிருந்து சரியான தகவல்களை பெற வேண்டும். மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு தெரிந்து கொள்வது மிக மிக அவசியம்.
மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்களுடன் உள்ள இணைஅமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அரவணைத்து ஒரு குழுவாக செயல்பட வேண்டும். எப்போதுமே தகவல்கள் வரும் வழிகளை அடைத்து விடாதீர்கள்; அவற்றை திறந்தே வைத்திருங்கள். அப்போதுதான் தகவல்கள் உங்களிடம் வந்து கொட்டும். இவ்வாறு அவர் பேசினார்.
- நமது டில்லி நிருபர் -