எங்களிடமும் பணம் இருந்திருந்தால் ஆட்சி அமைத்திருப்போம்: தே.மு.தி.க.,
எங்களிடமும் பணம் இருந்திருந்தால் ஆட்சி அமைத்திருப்போம்: தே.மு.தி.க.,
ADDED : ஆக 06, 2025 04:05 AM

சென்னை: காஞ்சிபுரத்தில் நடந்த தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், விஜய பிரபாகரன் பேசியதாவது:
இன்றைக்கு புதிதாக துவங்கப்பட்டுள்ள கட்சிகள், 1967 மற்றும் 1977ம் ஆண்டு தேர்தலை போல, 2026 சட்டசபை தேர்தல் இருக்கப் போகிறது என்கின்றன. அப்போது, தேர்தல்களில் பணப் பட்டுவாடா இல்லை; சமீபகால தேர்தல்களில் பட்டுவாடா அதிகரித்துள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் களத்தில் இருந்தனர். அவர்களை மீறி தனித்து போட்டியிட்டு, அரசியல் வரலாற்றை விஜயகாந்த், தன் பக்கம் மாற்றி அமைத்தார்.
அதேபோல, 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, எதிர்க்கட்சி தலைவர் ஆனார். அப்போது, வேட்டியை மடித்து கட்டி களத்தில் இறங்கி, விஜயகாந்த் வேலை பார்த்தார். அதே கெத்தோடு தே.மு.தி.க.,வினர் இருக்க வேண்டும்.
தி.மு.க., - அ.தி.மு.க.,வினரை போல, அதே கண்கள், அதே காது, அதே மூக்கு எல்லாம் தே.மு.தி.க.,வினருக்கும் உள்ளது. ஆனால், அக்கட்சிகளிடம் பணம் இருக்கிறது. பணம் இருந்திருந்தால், தே.மு.தி.க., ஆட்சியை பிடித்திருக்கும். தே.மு.தி.க.,விற்கு, கூட்டணியில் 25 சீட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

