இந்தியாவுக்கு எதிராக திரும்பினால் ஆணிவேரில் அடி விழும்!: மேஜர் மதன்குமார் கணிப்பு
இந்தியாவுக்கு எதிராக திரும்பினால் ஆணிவேரில் அடி விழும்!: மேஜர் மதன்குமார் கணிப்பு
ADDED : மே 08, 2025 05:14 AM

இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் மதன்குமார் அளித்த பேட்டி:
கடந்த ஏப்., 22ம் தேதி, பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான செயலில், நம் நாட்டு பெண்கள், அவர்களின் கணவர்களை இழந்து தவித்த தருணம், பலர் விதவைகளாகி உள்ளனர்.
'ஆப்பரேஷன் சிந்துார்'
நம் கலாசாரப்படி பெண்கள் நெற்றியில் வைக்கக்கூடிய குங்குமம் நினைவாக, இந்த பதிலடி தாக்குதலுக்கு, 'ஆப்பரேஷன் சிந்துார்' என, பிரதமர் மோடி பெயர் வைத்துள்ளார். இதற்கான திட்டம், கடந்த, 14 நாட்களாக வகுக்கப்பட்டது. இதையடுத்து, நம் முப்படைகளின் அதிகாரிகள், உளவுத்துறை ஒன்றிணைந்து, இந்த பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு ஆணிவேரில் அடி விழ வேண்டும் என்று, முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி, அதிகாலை நடந்த பதிலடி தாக்குதலில், ஒன்பது பயங்கரவாதிகளின் முகாம்கள் தரைமட்டமாகி உள்ளன. நாம் செய்த இந்த சம்பவம் மிக முக்கியம் வாய்ந்தது. ஏப்., 22ல் நடந்த தாக்குதலுக்குப் பின், பயங்கரவாதிகளை வேறு இடத்துக்கு மாற்றியுள்ளது பாகிஸ்தான் ராணுவம். அதை நம் உளவுத்துறையும், 'ரா' அமைப்பும் துல்லியமாக கண்டுபிடித்து, எங்கு உள்ளனர் என்பதை கண்டறிந்தனர். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தரவுகளை பாதுகாப்புத் துறைக்கு வழங்கினர். அவர்கள் சரியாக திட்டமிட்டு, ராஜதந்திரங்கள் செய்தனர்.
குறிவைத்து தாக்கினோம்
ஒருபுறம் இந்திய கடற்படை, பாகிஸ்தானை நோக்கிச் செல்வதும் திரும்புவதுமாக இருந்தது, நம்மை தாக்கப் போகின்றனர் என, பாகிஸ்தான் நினைத்தது. நேற்று முன்தினம் போர் ஒத்திகை நடக்கும் என்று, அறிவித்தோம். எப்படியும் போர் நடக்க, 20 நாட்களாகும் என நினைத்தது பாகிஸ்தான். இதை பயன்படுத்தி இந்தியா, 26 நிமிடங்களில் ஏவுகணைகளை வைத்து, பயங்கரவாதிகளின் இடங்களை தாக்கி அழித்துள்ளது.
நாம் பயங்கரவாதிகளை ஏன் தாக்கினோம்; எந்த இடத்தை குறிவைத்தோம் என, அரசு தெளிவாக சொல்லியுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டவர்கள் அனைவரும் படுபாதக பயங்கரவாதிகளே. அவர்களின் பயிற்சி இடத்தையும் நாம் குறிவைத்து தாக்கியுள்ளோம். இது, பாகிஸ்தானுக்கு விழுந்த பெரிய அடி. தாக்குதல் குறித்த வீடியோவை வெளியிட்டு, உலகுக்கே இந்தியா காட்டியுள்ளது.
இந்தியாவில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை. பயங்கரவாதத்தை இந்தியாவுக்கு எதிராக கையில் எடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் ஆணிவேரில் கை வைப்போம் என்பதே நாம் தரும் செய்தி. இது, பாகிஸ்தானின் இதயத்தில் நடந்த தாக்குதல் என்பதை, நாம் மறந்து விடக்கூடாது. இதற்கு பதிலடி தருவோம் என்று பாகிஸ்தான் பிதற்றுகிறது.
அவர்கள் எதிர் தாக்குதல் நடத்த நினைத்தால், அவர்களின் லாகூர், கராச்சி நகரங்கள் தீப்பற்றி எரிந்து, 10 மடங்கு அடி விழும். 'ஆப்பரேஷன் சிந்துார் 2.0' வெகு விரைவில் வரும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -