வெளிச்சம் பத்தாம திணறுது 'டார்ச்' கட்சி; ஜாதிக்காரரை தேடுறாரு நம்ம ஊரு மாஜி!
வெளிச்சம் பத்தாம திணறுது 'டார்ச்' கட்சி; ஜாதிக்காரரை தேடுறாரு நம்ம ஊரு மாஜி!
UPDATED : மார் 19, 2024 09:51 AM
ADDED : மார் 19, 2024 12:35 AM

பிரதமர் மோடியின் 'ரோடு ஷோ'க்கான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக, சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் நகர்வலம் புறப்பட்டனர்.
ஆங்காங்கே போலீசார் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர். உயரமான கட்டடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிற்க வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களை பார்த்த மித்ரா, ''பாதுகாப்பு ஏற்பாடு பக்காவா இருக்கே. அப்புறம் ஏதுக்கு, பிரதமர் நிகழ்ச்சிக்கு போலீஸ் தரப்புல அனுமதி மறுத்து, ஐகோர்ட்டில் 'குட்டு' வாங்குனாங்க,'' என, கேட்டாள்.
'டபுள் கேம்' போலீஸ்
''ஆமா, மித்து! நீ கேக்குற கேள்வி கரெக்ட்டு தான்! 'ரிஸ்க்' எடுக்குறதுக்கு நம்மூர் போலீஸ் அதிகாரிங்க ரொம்பவே பயப்படுறாங்க. போன வருஷம் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடந்த அன்னைக்கு சி.எம்., வர்றதா இருந்துச்சு. பாதுகாப்பு காரணங்களைச் சொல்லி, அவரை வர விடாம தடுத்துட்டாங்க,''
''அதே மாதிரி, 1998ல வெடிகுண்டு வெடிச்சு, அப்பாவி மக்கள் உயிரிழந்த ஆர்.எஸ்.புரம் ஏரியாவுக்கு பிரதமர் போனா... அசம்பாவிதம் நடக்க வாய்ப்பிருக்குன்னு சொல்லி, அனுமதி கொடுக்க மறுத்துருக்காங்க.
கோர்ட் வரைக்கும் விவகாரம் போனதுனால, இதெல்லாம் தேவையான்னு போலீசாரிடம் யாராச்சும் கேட்டா, தி.மு.க., அரசின் 'குட் புக்'குல இருக்கணும்ங்கிறதுக்காக, அப்படி செஞ்சதா சொல்றாங்க,''
''இது சம்மந்தமா... தாமரை கட்சிக்காரங்களுக்கும் முன்கூட்டியே தகவல் சொல்லிட்டாங்களாம். அதனாலதான், அனுமதி மறுத்த கொஞ்ச நேரத்துலயே, கோர்ட்டுல மனு தாக்கல் செஞ்சு பர்மிஷன் வாங்கியிருக்காங்க. போலீஸ் ஆபீசர்களின் 'டபுள் கேம்' ஆட்டத்தை, ஆளுங்கட்சிக்காரங்க கண்காணிச்சிட்டு இருக்காங்களாம்,''
தாமரைக்கட்சி கெத்து!
மேட்டுப்பாளையம் ரோட்டின் இருபுறமும், தாமரை கொடி கட்டியிருந்ததை பார்த்த மித்ரா, ''என்னக்கா, ஏற்பாடு தடபுடலா இருக்குதே,'' என, கேட்டாள்.
''ஆமாப்பா, இரு திராவிட கட்சிகளை எதிர்த்து, பா.ஜ., போட்டியிடப் போகுது. பா.ஜ.,வுக்கு தனித்த செல்வாக்குல ஜெயிக்கணும். பல்லடத்துல இருந்த மாதிரி, பிரதமரை வியக்க வைக்கணும்னு, ரோட்டின் இருபுறம் தாமரை கொடியை பறக்க விட்டுருக்காங்க,''
''பிரதமரை அழைச்சிட்டு வந்து கெத்து காட்டுறதுனால, தொகுதியை யாருக்கு கொடுப்பாங்கன்னு கட்சிக்குள்ள விவாதமே நடந்துட்டு இருக்கு. 'மலை'யானவருக்கா, 'அக்கா'வுக்கா? யாருக்கு வாய்ப்பு கொடுப்பாங்கன்னு பேசிட்டு இருக்காங்க,''
ஜாதிக்கட்சியாகிடுச்சு
''திராவிட கட்சிகள்ல யாரை வேட்பாளரா நிறுத்தப் போறாங்களாம்... ஏதாச்சும் அப்டேட் இருக்குதா...''
''அ.தி.மு.க.,வுல வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவங்க, போட்டியிடுறதுக்கு ஆர்வம் காட்டுறாங்க. 'மாஜி'யோ, அவரது ஜாதிக்காரரை தேடிட்டு இருக்காராம்... இதனால, ரெண்டு எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில இருக்காங்க.
நம்மூர்ல இதுக்கு முன்னாடி ஜெயிச்சவங்க யாரு, யாருன்னு லிஸ்ட் போட்டு, ஒவ்வொருத்தரோட ஜாதியை சொல்லியிருக்காங்க. இதுல, ரெண்டு பேரை தவிர, மத்தவங்க வெவ்வேறு ஜாதிக்காரங்க. கட்சி செல்வாக்கு, கூட்டணி பலத்துல ஜெயிச்சிருக்காங்க.
அதனால, குறிப்பிட்ட ஜாதிக்காரங்களை நிறுத்தாம, செல்வாக்குள்ள நிர்வாகியை நிறுத்தணும்னு யோசனை சொல்லி இருக்காங்க. இதையெல்லாம், 'மாஜி' காது கொடுத்து கேட்கலையாம்,''
''ஆனா, அவரது ஜாதிக்காரங்களோ, எதுக்கு கரன்சி செலவழிச்சிட்டு கடன்காரனா அலையணுமான்னு யோசிக்கிறாங்க. இருந்தாலும், தாமரை கட்சியில யாரு வேட்பாளருன்னு பார்த்துட்டு முடிவு செய்வாங்களாம்,''
''இதே மாதிரியே... பா.ஜ., வேட்பாளர் யாருன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமே தி.மு.க., தரப்புல வேட்பாளரை அறிவிப்பாங்களாம். பா.ஜ,,வுல லேடியை நிறுத்துனா, தி.மு.க.,விலும் லேடியை நிறுத்துவாங்களாம். அதுக்கு ஏத்த மாதிரி வேட்பாளரை தேர்வு செஞ்சு, ரெடியா இருக்காங்களாம்,''
மாயமாகும் மய்யம்!
''டார்ச் கட்சிக்காரங்க ரொம்பவே மனசு வெதும்பி, போயிருக்காங்கன்னு சொல்றாங்களே...''
''ஆமாப்பா... உண்மை தான்! நம்மவர் எப்படியாவது தொகுதியை வாங்கிடுவாரு; அவரு தான் எம்.பி.,ன்னு மனக்கோட்டை கட்டியிருந்தாங்க. அவரோ, தேர்தலில் கட்சியே போட்டியிடலைன்னு சொல்லி, ஒதுங்குனது பலருக்கும் பிடிக்கலை.
இதை பயன்படுத்தி, கட்சி நிர்வாகிகளை இழுக்க, மத்த கட்சிக்காரங்க துாது அனுப்பிட்டு இருக்காங்க. இதுல, பெண் நிர்வாகி ஒருத்தரு, தாமரை கட்சியில இணைஞ்சிட்டாரு.
இதே மாதிரி, நிர்வாகிகள் பலரும் படிப்படியா காணாம போயிடுவாங்க... 2026க்குள்ள கட்சி இருக்குமான்னு, டார்ச் லைட் அடிச்சுதான், தேட வேண்டியிருக்கும்னு அவுங்க கட்சிக்காரங்க புலம்பிட்டு இருக்காங்க,''
கதர் சட்டை சந்தோஷம்
''கதர் சட்டைக்காரங்க ரொம்பவே குஷியா இருந்தாங்களாமே...''
''அதுவா... ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் துடியலுார் பக்கத்துல கதர் கட்சி சார்புல பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடத்தியிருக்காங்க. வழக்கமா சைவ சாப்பாடு பரிமாறுவாங்க. இந்த தடவை சிக்கன் பிரியாணி போட்டு அசத்திட்டாங்க. ஆல்கஹால் மட்டும் சப்ளை இல்ல. அதனால, சிலருக்கு வருத்தமாம்... இருந்தாலும், பிரியாணி போட்டதால, கதர் சட்டைக்காரங்களுக்கு குஷி,''
நாங்களே போதும்!
''தி.மு.க., வேட்பாளரை குழி பறிக்கிறதுக்கு, உடன்பிறப்புக ரெடியா இருக்காங்களாமே...''
''ஆமாப்பா... நீ கேள்விப்பட்டது உண்மைதான்! நீலகிரியில ராசாவுக்கு அதிருப்தி இருக்குது. இருந்தாலும், அவரே மறுபடியும் போட்டி போடுவாருன்னு சொல்றாங்க.
அவருனால இதுவரைக்கும் எந்த பிரயோஜனமும் இல்லைன்னு கட்சிக்காரங்க புலம்பிட்டு இருக்காங்க. அதனால, எதிர்முகாமுக்கு ஆதரவுக்கரம் நீட்டுனா... அவுங்க ஆட்சி நடந்தா, ஏதாச்சும் ஒர்க் எடுத்துச் செஞ்சு, நாலு காசு பார்க்கலாம்னு நினைக்கிறாங்க,''
பிரியாணி பார்சல்
''எஸ்.பி., ஆபீசுக்கும், டி.எஸ்.பி., ஆபீசுக்கும் பிரியாணி பார்சல் வந்துச்சாமே... என்ன விவகாரம்,'' என, நோண்டினாள்.
''தொண்டாத்துார் ஏரியாவுல இருக்குற லாட்ஜ்ல சூதாட்ட கிளப் நடக்குது; தெனமும் லட்சக்கணக்குல பணம் புழங்குதாம். தேர்தல் அறிவிச்சதுனால, பறக்கும் படை ஆபீசர்ஸ் ரவுண்ட்ஸ் போக ஆரம்பிச்சிட்டாங்க. அவுங்ககிட்ட பணம் சிக்கி, ஸ்டேஷன் வருமானம் 'கட்'டாயிடக் கூடாதுன்னு, உள்ளூர் போலீஸ்காரங்க நினைக்கிறாங்க; அதனால, கிடா வெட்டி, கல்யாண மண்டபத்துல விருந்து வச்சிருக்காங்க.
இங்கிருந்து டி.எஸ்.பி., ஆபீசுக்கும், எஸ்.பி., ஆபீசுக்கும் பார்சல் அனுப்பியிருக்காங்கன்னு, 'நெட் ஒர்க்' எந்த அளவுக்கு, வேலை செய்யுதுன்னு பாருங்க,''
ஆபீசரின் அடாவடி
''அக்கா... எனக்கொரு விஷயம் தெரியும். அதைச் சொன்னா... நீங்க ஷாக் ஆகிடுவீங்க...'' என்ற மித்ரா, ''நம்மூர்ல இருக்கற லேடீஸ் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சிலர், ஆண்டு விழா நடத்துறது சம்பந்தமா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, போலீஸ் உயரதிகாரியை சந்திச்சிருக்காங்க.
அப்போ, 'ஸ்பான்சர்ல, 41 'சிசி டிவி' கேமரா வாங்கிக் கொடுங்க'ன்னு கேட்டாராம். இதைக் கேட்டதும் லேடீஸ் அமைப்பை சேர்ந்தவங்க, அதிர்ச்சி அடைச்சிட்டாங்களாம்.
போதைப்பொருள் கடத்துனவனே, 10 'சிசி டிவி' கேமரா தானே வாங்கிக் கொடுத்திருக்கான்; எங்ககிட்ட, 41 கேக்குறீங்களே... எங்களால மூனு தான் வாங்கித் தர முடியும்னு சொல்லி இருக்காங்க. அதனால, அவுங்க மேல சீறி விழுந்திருக்காரு. மரியாதைக்கு பெயர் போன நம்மூர்ல இப்படிப்பட்ட போலீஸ் ஆபீசரான்னு புலம்பிட்டு இருக்காங்க,''
கல்லா கட்டும் ஏட்டு
''மித்து, என்கிட்ட இன்னொரு போலீஸ் மேட்டர் இருக்கு, சொல்றேன் கேளு,'' என்ற சித்ரா, ''பீளமேடு ஸ்டேஷன்ல இருந்த ஏட்டு ஒருத்தரு, 'டாஸ்மாக்', லாட்ஜ் நிர்வாகிகளை மிரட்டி, கரன்சி வசூல்ல மன்னனா இருந்தாரு. மேலிடத்துக்கு புகார் போனதும், வடவள்ளிக்கு மாத்துனாங்க...''
''அவரோ... செல்வாக்கை பயன்படுத்தி, மறுபடியும் பீளமேடுக்கு வந்துட்டாரு. இப்போ, வசூல் வேட்டையை ஆரம்பிச்சிட்டாராம். இவரை பத்தி யாராவது மேலிடத்துக்கு தகவல் சொன்னா... அவங்களை பத்தி, பொய்ப்புகாரை தட்டி விட்டு, மிரட்டுறாராம். ஒவ்வொரு மாசமும் கணிசமான தொகை வசூலாகுறதுனால, ஏரியாவல ஜாலியா வலம் வர்றாராம்...'' என்றபடி, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கார்ப்பரேஷன் ஆபீஸ் அருகே, ஸ்கூட்டரை நிறுத்தினாள் சித்ரா.
''அக்கா, கார்ப்பரேஷன்ல மூணு ஆபீசர்ஸ் மேல சார்ஜ் பைல் பண்ணி, விளக்கம் கேட்டுருக்காங்களாமே...''
''அதுவா... கார்ப்பரேஷன் ஸ்கூல் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்குனதுல... கமிஷனரிடமும், துணை கமிஷனரிடம் பைல்ல கையெழுத்து வாங்காம, லட்சக்கணக்குல பணத்தை அள்ளிக் கொடுத்துட்டாங்க.
இந்த விவகாரத்துல, தி.மு.க.,வை சேர்ந்த லேடி தலைவர் ஒருத்தரின் அழுத்தம் தான் காரணம்னு சொல்றாங்க. இதை கமிஷனர்கிட்ட நேர்ல சொல்லி அழுதுருக்காங்க... அவரோ இதையெல்லாம் உங்க விளக்கத்துல எழுதுப்பூர்வமா எழுதிக் கொடுங்கன்னு செல்லிட்டாராம்... தி.மு.க., கவுன்சிலர் மேல கம்ப்ளைன்ட் பதிவானா, அவரோட பதவிக்கு ஆபத்தா முடிஞ்சிடும்னு சொல்றாங்க...''என்றபடி, டி.பி., ரோட்டில் நடக்க ஆரம்பித்தாள் சித்ரா.
அவளை பின்தொடர்ந்தாள் மித்ரா.

