காமராஜர் அரங்க மைதானத்தில் சட்டவிரோத செயல்; இரவோடு இரவாக சுற்றுச்சுவர் கட்டிய காங்கிரசார்
காமராஜர் அரங்க மைதானத்தில் சட்டவிரோத செயல்; இரவோடு இரவாக சுற்றுச்சுவர் கட்டிய காங்கிரசார்
ADDED : மே 06, 2025 03:08 AM

சென்னை காமராஜர் அரங்க மைதானத்திற்குள் தனியார் வாகனங்கள் நுழைய தடை விதிக்கவும், பல நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை பாதுகாக்கவும், இரவோடு இரவாக சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரசின் சொத்து பாதுகாப்பு குழு ஆலோசனை கூட்டம், சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார்.
தமிழக காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் தங்கபாலு உட்பட 31 பேர் பங்கேற்றனர். அகில இந்திய காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் விஜய் இந்தர் சிங்காலா, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
ஆக்கிரமிப்பு
காங்கிரசுக்கு, தமிழகம் முழுதும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்கள், மாற்று கட்சிகளாலும், தனியாராலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன.
அவற்றை சட்ட ரீதியாக மீட்டு, அவற்றின் வழியாக வரும் வருவாயை, கட்சி கணக்கில் செலுத்துவது என, அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டையில், காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான காமராஜர் மைதானம் உள்ளது. அது முறையான பராமரிப்பின்றி உள்ளது.
காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான, பல நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இடத்தை பாதுகாப்பதற்காக, நேற்று முன்தினம் இரவோடு இரவாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
சென்னை, திருச்சி, கடலுார், திருவண்ணாமலை, வேலுார், திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில், காங்கிரசுக்கு நிறைய சொத்துக்கள் உள்ளன.
இதில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் மைதானம் மிகப்பெரிய சொத்து. 50 கிரவுண்ட் கொண்ட அந்த மைதானம் மட்டுமே, பல நுாறு கோடி ரூபாய் மதிப்பு கொண்டது.
பிராந்தி, பீர் பாட்டில்
இந்த நிலம், 25 ஆண்டுகளுக்கு முன் அறக்கட்டளை நிர்வாகிகளாக இருந்தவர்கள் சிலரின் முயற்சியால், வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களுக்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அந்த நிலத்தை வணிக ரீதியாக பயன்படுத்தவும் அனுமதித்தனர். அதன் அடிப்படையில், வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனங்கள் நிறுத்தும் இடமாக, அந்த மைதானம் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், நீண்ட காலத்திற்கு பின் இந்த மைதானத்தில், தமிழக காங்கிரஸ் சார்பில், நேற்று முன்தினம் மாநாடு நடத்தப்பட்டது. அதற்காக மைதானத்தை சுத்தப்படுத்தியபோது, 2,000க்கும் மேற்பட்ட பிராந்தி, பீர் பாட்டில்கள் அங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
மைதானத்தின் முன்பக்கத்தில் தான் கடைகள், நுழைவாயில் உள்ளன. பின்பக்கத்தில் எந்த வேலியும் கிடையாது. அதனால், அந்த வழியாக இரவில் உள்ளே நுழையும் கும்பல், சட்டவிரோத செயல்களை செய்து வந்துள்ளது.
இதையடுத்து, மாநாடு முடிந்ததும் நேற்று முன்தினம் இரவோடு இரவாக, அந்த மைதானத்திற்குள் வாகனம், ஆட்கள் நுழைய முடியாதபடி, சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. 'காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான இடம்' என்ற பெயர் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
