மனப்பக்குவம் இல்லாதவர் கவர்னர் :அமைச்சர் ரகுபதி விமர்சனம்
மனப்பக்குவம் இல்லாதவர் கவர்னர் :அமைச்சர் ரகுபதி விமர்சனம்
ADDED : பிப் 12, 2024 11:02 PM

சென்னை :''தமிழகம் அனைத்து விதத்திலும் முதலிடத்தில் உள்ளதை, புள்ளி விபரத்தோடு சொல்வதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், தாங்கிக்கொள்ளும் சக்தி கவர்னருக்கு இல்லை,'' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
ஜனநாயகத்தை மதிக்கும் முதல்வர், கவர்னரை முறைப்படி அழைத்து, சட்டசபை முதல் கூட்டத்தை கூட்டினார். கேரள கவர்னர் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு இறங்கிச் சென்றார். தமிழக கவர்னர், தன் உரையிலிருந்து ஒரு வார்த்தை கூட பேசாமல், சொந்தமாக சில கருத்துக்களை கூறிவிட்டு அமர்ந்து விட்டார்.
தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்கிறார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபு என்பதை, கடந்த ஆண்டே சபாநாயகர் எடுத்துக் கூறியுள்ளார். தென் மாநில கவர்னர்களின் திருவிளையாடல்கள், அங்குள்ள அரசுக்கு எதிராக அமைந்துள்ளன. இதை, இந்திய மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நிச்சயமாக கவர்னரின் நடவடிக்கைகள், வட மாநிலங்களில், 'இண்டியா' கூட்டணிக்கு வலிமை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. அவர் ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தி உள்ளார். உரையில் சந்தேகம் இருந்தால் கேட்கலாம். உரை உண்மைக்கு மாறாக உள்ளது என்று கூறினால், விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம்.தமிழகம் அனைத்து விதத்திலும் முதலிடத்தில் உள்ளதை, புள்ளிவிபரத்தோடு சொல்வதை, ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம், தாங்கிக் கொள்ளும் சக்தி கவர்னருக்கு இல்லை.தேசிய அளவில் ஒட்டுமொத்த வளர்ச்சியில், தமிழகம் உயர்ந்துள்ளது.
விளையாட்டுத் துறையில் ஐந்தாம் இடத்தில் இருந்து, இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதை ஏற்று படிக்க மனமில்லாமல், அரசின் சாதனைகளை வாசிக்க விருப்பம் இல்லாமல், பொய்யான கருத்தை கவர்னர் கூறியுள்ளார்.எந்த கருத்து வேறுபாடு இருந்தாலும், கவர்னர் பதவிக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என, முதல்வர் சொல்கிறார். இதன் காரணமாகவே இத்தனை நிகழ்வுகளையும் தாங்கிக் கொண்டிருக்கிறோம்.
தேசிய கீதத்தை வாசிக்க வேண்டும் என்று கூறும் கவர்னர், சபாநாயகர் உரையை படிக்கும் வரை பொறுமையோடு இருந்தார்; இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்திருக்கலாம். தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின், மரியாதையோடு சென்றிருக்கலாம்.மத்திய அரசுக்கு எதிரான கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களை, கவர்னர்கள் குறிவைத்து அசிங்கப்படுத்த முயற்சிக்கின்றனர். எங்களை அசிங்கப்படுத்த நினைப்பவர்களை, மக்கள் அசிங்கப்படுத்துவர்.நாங்கள் சுமுகமான சூழ்நிலையை உருவாக்க நினைத்தோம்.
கவர்னர் ரிமோட் கட்டுப்பாட்டில் உள்ளார். அவர் சுயேச்சையாக இயங்க முடியாது. கவர்னர் உரையில், இரண்டு, மூன்று இடங்களில் தான் முதல்வர் பெயர் இருந்தது. நாங்கள் செய்யும் சாதனைகள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதால், அதற்கு முக்கியத்துவம் அளித்து உரை தயாரிக்கப்பட்டது.
இந்த அறிக்கையை வாசிக்க, கவர்னருக்கு மனமில்லை. நாங்கள் மரியாதையோடு அழைத்தோம். அவர் மரியாதையோடு நடந்து கொள்ளவில்லை. கவர்னருடன் அனுசரித்து செல்லவே விரும்புகிறோம்.கவர்னர் குறித்து பழனிசாமியால் விமர்சனம் செய்ய முடியாது. ஏதேனும் கூறினால், 'ரெய்டு' வந்து விடும். பா.ஜ., குறித்து, கவர்னர் குறித்து எதுவும் கூற மாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.