பிரதமர் மோடி முன்னிலையில் பா.ஜ.,வில் கஸ்துாரி ஐக்கியம்?
பிரதமர் மோடி முன்னிலையில் பா.ஜ.,வில் கஸ்துாரி ஐக்கியம்?
UPDATED : பிப் 17, 2024 04:49 AM
ADDED : பிப் 16, 2024 10:09 PM

பா.ஜ.,வில் இருந்து விலகிய நடிகை கவுதமி, அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளார். அதே நேரத்தில், பிரதமர் மோடி முன்னிலையில் பா.ஜ., வில் நடிகை கஸ்துாரி இணைகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை கவுதமி, 1997ல் பா.ஜ., வில் இணைந்தார். இளைஞரணி துணை தலைவர், தேசிய செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார். தன் சொத்து தொடர்பான பிரச்னையில், பா.ஜ., தனக்கு உதவவில்லை எனக்கூறி, கடந்த ஆண்டு அக்டோபரில், பா.ஜ.,வில் இருந்து விலகினார்.
எந்த கட்சியிலும் சேராமல் இருந்த அவர், முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன் ஏற்பாட்டில், சமீபத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
கவுதமிக்கு கொள்கை பரப்பு இணை செயலர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. ஆனால், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
சுற்றுப்பயணத்தின் போது, அவரது தேர்தல் பிரசாரத்திற்கு பதிலடி தரும் வகையில் நடிகை கஸ்துாரியை, பா.ஜ.,வில் இணைக்கும் பேச்சு துவக்கப்பட்டுள்ளது.
வரும் 27ம்தேதி, பல்லடத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின், 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
அந்த பொதுக்கூட்டத்தை, தமிழகத்தில் அரசியல் புரட்சி ஏற்படுத்தும் வகையில் பிரமாண்டமாக நடத்துவதற்கு நேற்று முன்தினம் கால்கோள் விழாவும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அன்று, மாற்று கட்சிகளிலிருந்து முக்கிய நிர்வாகிகள், குறிப்பாக, தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களும், பிரதமர் மோடி முன்னிலையில் பா.ஜ.,வில் இணைகின்றனர். அவர்களின் வரிசையில், கஸ்துாரியும் பா.ஜ.,வில் இணைகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
-நமது நிருபர்-