'இல்லீகல் பார்'கள் அதிகரிப்பு; வரி செலுத்தும் ஓட்டல்கள் பாதிப்பு!
'இல்லீகல் பார்'கள் அதிகரிப்பு; வரி செலுத்தும் ஓட்டல்கள் பாதிப்பு!
UPDATED : ஜன 16, 2024 03:02 AM
ADDED : ஜன 15, 2024 11:19 PM

தமிழகத்தில், அரசுக்கு அதிகளவில் வருவாய் செலுத்தும் ஓட்டல் பார்களுக்கு மூடுவிழா நடத்தும் வகையில், மாநிலம் முழுவதும் 'இல்லீகல் பார்'கள் அதிகரித்து வருவதாக ஓட்டல் உரிமையாளர்கள் குமுறுகின்றனர்.
டாஸ்மாக் மது விற்பனை மூலமாக, தமிழக அரசுக்கு கடந்த ஆண்டில், ரூ.45 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள 4800க்கும் அதிகமான மதுக்கடைகளில் தான், மிக அதிக அளவிலான மது விற்பனை நடக்கிறது. இவற்றைத் தவிர்த்து, கிளப் மற்றும் ஓட்டல் பார்கள் ஆகியவற்றுக்கும் டாஸ்மாக் மூலமாகவே மது விநியோகிக்கப்படுகிறது.
இவற்றில் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்கப்படும் மது வகைகள், அரசால் நேரடியாக விற்கப்படுவதால், அவற்றுக்குக் கூடுதல் வரி எதுவும் விதிக்கப்படுவதில்லை.
ஆனால் கிளப்களில் இயங்கும் பார்களுக்கு, மது பான விலையில் ஒரு சதவீதம் செஸ் வரியாக வசூலிக்கப்படுகிறது. ஓட்டல் பார்களுக்கு, இந்த ஒரு சதவீத செஸ் வரியுடன் 14.5 சதவீதம் 'வாட்' வரியும் சேர்த்து வசூல் செய்யப்படுகிறது.
தமிழகத்திலுள்ள ஆயிரக்கணக்கான ஓட்டல்களில், 836 ஓட்டல்களில் மட்டுமே, பார் நடத்துவதற்கான எப்.எல்.3 லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த லைசென்ஸ் பெறுவதற்கு, இத்தனை அறைகள் இருக்க வேண்டும், என்னென்ன வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட நிறைய விதிமுறைகள் உள்ளன. இந்த லைசென்ஸ்சை ஆண்டுதோறும் புதுப்பிக்கவும் வேண்டும்.
ஓட்டல்களின் அந்தஸ்தைப் பொறுத்து, ரூ.5 லட்சம், ரூ.6.5 லட்சம் ரூ.10 லட்சம், ரூ.25 லட்சம் (24 மணி நேர மது விற்பனைக்கான லைசென்ஸ்) வீதமாக, லைசென்ஸ் புதுப்பித்தல் கட்டணமும் செலுத்த வேண்டும்.
மது விற்பனையே நடக்காவிட்டாலும், இந்த லைசென்சை புதுப்பிப்பதற்கு, இந்தக் கட்டணத்தைச் செலுத்துவதைத் தவிர, வேறு வழியில்லை.
இதனால் தான், மற்ற இடங்களை விட, ஓட்டல் பார்களில் மது பானங்களின் விலை, பல மடங்கு அதிகமாகவுள்ளது.
ஆனால் டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரித்த பின்பு, ஓட்டல் பார்களின் மது விற்பனை குறைந்துள்ளது.
மது பானங்களுக்கு செஸ், வாட் மற்றும் உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., என பல கோடி ரூபாய் வரிகளைச் செலுத்தி, அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் தங்களுடைய ஓட்டல் தொழிலைக் காப்பதற்கு, அரசு முன் வரவில்லை என்று ஓட்டல் உரிமையாளர்கள் குமுறுகின்றனர்.
எப்.எல்.,2 பார்களுக்கு லைசென்ஸ் வாரி வழங்குவதையும், 'இல்லீகல்' மது விற்பனையையும் நிறுத்துவதே, இப்பிரச்னைக்குத் தீர்வாகும்.
-நமது சிறப்பு நிருபர்-