ஆண்ட பரம்பரை, வீர பரம்பரை பரப்புரையால் வன்முறை அதிகரிப்பு: திருமாவளவன் குற்றச்சாட்டு
ஆண்ட பரம்பரை, வீர பரம்பரை பரப்புரையால் வன்முறை அதிகரிப்பு: திருமாவளவன் குற்றச்சாட்டு
UPDATED : ஏப் 17, 2025 02:57 AM
ADDED : ஏப் 16, 2025 06:17 PM

சென்னை:'ஆண்ட பரம்பரை, வீர பரம்பரை என்ற பரப்புரைகளால், பள்ளி மாணவர்களிடயே வன்முறை அதிகரித்துள்ளது' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
சக மாணவன் மற்றும் ஆசிரியரை, தனியார் பள்ளி மாணவன் வெட்டிய சம்பவம் கவலை அளிக்கிறது. தொழில்முறை குற்றவாளியைபோல், அந்த மாணவன் தாக்குதல் நடத்தியுள்ளான். பள்ளி மாணவர்கள், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு, நம் சார்ந்துள்ள சமூக சூழல்களே காரணமாக உள்ளன.
மதவாத, ஜாதியவாத அமைப்புகள் தங்களது கருத்தியலை பரப்புகின்றன. ஒருசில அரசியல் கட்சிகள் வெளிப்படையாகவே, இளம் தலைமுறையினரிடம் ஆண்ட பரம்பரை, வீர பரம்பரை என்றெல்லாம் திட்டமிட்டே பரப்புரை செய்கின்றனர். இது குற்றங்களை ஊக்கப்படுத்துவதால், பள்ளி சிறுவர்களிடையே இதுபோன்ற வன்முறை ஈர்ப்பு உருவாகிறது. மேலும், மதவெறி, ஜாதிவெறி தாக்குதல்களை நடத்தும் வகையிலான துணிவையும் தருகிறது.
எனவே, தென் மாவட்ட வன்முறைகள் நிகழ்வுகள் தொடர்பாக, நீதிபதி சந்துரு ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்களிடையே சகோதரத்துவத்தை உருவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.