ADDED : செப் 08, 2025 04:01 AM

சென்னை: கடந்த 2021ல் நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், 66 பேர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,க்கள் ஆகினர்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோது, அவரது ஆதரவாளர்களான எம்.எல்.ஏ.,க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் நீக்கப்பட்டனர். அவர்கள் தனியாக செயல்படுகின்றனர்.
எம்.எல்.ஏ., ஐயப்பனும், பன்னீர்செல்வம் அணியில் இருக்கிறார். தற்போது, அ.தி.மு.க.,வுக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டு, 'கட்சி ஒன்றிணைய வேண்டும்' என குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இதனால், அ.தி.மு.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வரிசையில், கோபி தொகுதி எம்.எல்.ஏ.,வான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் சேர்ந்துள்ளார்.
இதுபோல, அவரது ஆதரவாளரான எம்.எல்.ஏ., பன்னாரியும் அதிருப்தியாளர் வரிசையில் இணைவதால், சட்டசபையில், அ.தி.மு.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.