இந்தியா - ஐரோப்பா: இணைந்த கைகள்! கைகூடியது 18 ஆண்டுகால முயற்சி
இந்தியா - ஐரோப்பா: இணைந்த கைகள்! கைகூடியது 18 ஆண்டுகால முயற்சி
ADDED : ஜன 28, 2026 06:29 AM

புதுடில்லி: உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா, உலகின் 2வது பெரிய பொருளாதார சக்தியான ஐரோப்பிய யூனியனுடன் வரலாற்று சிறப்புமிக்க, தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இந்தியா, ஐரோப்பிய யூனியன் இணைந்து, உலகின் ஜி.டி.பி.,யில் 25 சதவீதத்தையும், உலகின் வர்த்தகத்தில் 3ல் ஒரு பங்கையும் கொண்டுள்ளதால், இந்த ஒப்பந்தம் ஒட்டுமொத்த உலகை வியந்து பார்க்க செய்திருக்கிறது.
இருதரப்பிலும் மொத்தம் 200 கோடி மக்களுக்கான ஒப்பந்தம் இது என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இதன் அம்சங்கள் சிலவற்றுக்கு இருதரப்பிலும் சட்ட அங்கீகாரம் பெற வேண்டியுள்ளதால், அடுத்த ஆண்டு வாக்கில் ஒப்பந்தம் அமலுக்கு வரும். எனினும், இந்தாண்டு இறுதிக்குள் இதை அமல்படுத்த நம்பிக்கை உள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகம் பெறும் பலன்கள்
தமிழகத்தில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 2.50 முதல் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி நடக்கிறது. இதில், ஐரோப்பிய யூனியனின் பங்கு சுமார் 15 முதல் 20 சதவீதம். இத்தகைய சூழலில், இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே ஏற்பட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து பார்க்கலாம்.
ஜவுளி, தோல், பொறியியல் பொருட்கள், வாகன துறைக்கு பூஜ்யம் அல்லது குறைந்த வரி விதிப்பு சாதகமான அம்சம். அடுத்த 5-7 ஆண்டுகளில் ஐரோப்பிய யூனியனுக்கு தமிழகத்தின் ஏற்றுமதி 25 - 40 சதவீதம் உயரலாம். இதனால், ஆண்டுக்கு 40,000- - 80,000 கோடி ரூபாய் கூடுதல் ஏற்றுமதி, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகக்கூடும்.
1. ஜவுளி, ஆடை, பின்னலாடை (திருப்பூர், ஈரோடு, சேலம் மண்டலம்)
ஐரோப்பிய யூனியனில் ஆடை, ஜவுளி மீதான வரி கிட்டத்தட்ட 12 சதவீதத்திலிருந்து 7 ஆண்டுகளில் பூஜ்யம் ஆகும். நம் நாட்டின் பின்னலாடை ஏற்றுமதியில் 40- - 50 சதவீதம் பங்கு வகிக்கும் திருப்பூர், வங்கதேசம்,வியட்நாமுக்கு எதிராக மிகப்பெரிய போட்டித்திறன் பெறும்.
2. தோல், காலணி, தோல் பொருட்கள் (வேலுார், அம்பூர், ராணிப்பேட்டை மண்டலம்)
வரி, கிட்டத்தட்ட 17 சதவீதத்திலிருந்து பூஜ்யம் ஆகும். ஐரோப்பிய யூனியனின் பிரீமியம் சந்தைகள் திறக்கும். ஏற்கனவே ஐரோப்பாவுக்கான ஏற்றுமதியில் வலுவான நிலை கொண்ட இந்த தொழில் மண்டலம் 30- - 50 சதவீத ஏற்றுமதி வளர்ச்சி காணலாம்.
3. வாகனங்கள், பாகங்கள், இ.வி.,க்கள் (சென்னை, ஒரகடம், ஓசூர் மண்டலம்)
வாகனங்கள் மற்றும் வாகன பாகங்கள் மீதான வரி படிப்படியாக குறையும். தேசிய வாகன உற்பத்தியில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பங்கு வகிக்கும் தமிழ்நாட்டின் ஏற்றுமதி, இந்த ஒப்பந்தத்தால் மேலும் உயரும். மாநில மின்சார வாகனங்கள்,பேட்டரி துறையில் ஐரோப்பிய யூனியனின் அன்னிய நேரடி முதலீடு அதிகரிக்கும்.
4. பொறியியல் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், ரசாயனங்கள் (சென்னை, ஸ்ரீபெரும்புதுார், கோயம்புத்துார் மண்டலம்)
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இயந்திரங்கள், எலக்ட்ரானிக்ஸ், ரசாயனங்கள் மீது வரி ரத்தாகும். பாக்ஸ்கான், சாம்சங், டெல் நிறுவனங்களுக்கான உதிரிபாக வினியோகஸ்தர்கள், மருந்து தயாரிப்பாளர்கள் பயனடைவர். செமிகண்டக்டர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் ஜெர்மனி, பிரான்ஸ் நிறுவன முதலீடுகள் அதிகரிக்கும்.
5. பொதுவான பலன்கள்
ஐரோப்பிய யூனியன் நிறுவனங்கள் விரிவாக்க திட்டங்கள் வாயிலாக, சென்னை, எண்ணுார் துறைமுகம், சரக்கு போக்குவரத்து மேம்பாடு, திறன் மேம்பாடு, பசுமை தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை நிகழும். சேவைகள், ஐ.டி., துறை பலனடையும். நீண்டகாலத்தில், மாநில ஜி.டி.பி., ஆண்டுக்கு கிட்டத்தட்ட 1-2 சதவீதம் உயர வாய்ப்பு.

சிறப்பம்சங்கள்
* இந்தியாவின் 99 சதவீத ஏற்றுமதி பொருட்களுக்கு ஐரோப்பிய யூனியன் சந்தையில் முன்னுரிமை கிடைக்கும்
* அதிக தொழிலாளர்களை கொண்ட ஜவுளி, தோல், கடல் சார் ஏற்றுமதி, நகை ஆகிய துறைகளில் முன்னுரிமை அனுமதி
* தற்போது ஏற்றுமதிக்கான வரி 10 சதவீதமாக உள்ள நிலையில், ஓப்பந்தம் நடைமுறைக்கு வந்தவுடன் பூஜ்ஜியமாக குறைக்கப்படும்
* வாகனத்துறையில், கவனமாக உருவாக்கப்பட்டுள்ள 'கோட்டா' முறைப்படி, தளர்வுகள் கிடைக்கும்
* இந்தியாவில் தயாராகும் கார்கள், இதர வாகனங்களின் ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கும்
* அதிக போட்டியின் காரணமாக, இந்திய வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன தயாரிப்புகள் கிடைக்கும்
* பால் பொருட்கள், தானியங்கள், குறிப்பிட்ட பழங்கள், காய்கறிகள் உற்பத்தியாளர்கள் பாதுகாக்கப்படுவர்.
சிறப்பம்சங்கள்
* திறன் வாய்ந்த இந்திய தொழில்முறை நிபுணர்கள், எளிதாக ஐரோப்பிய யூனியனுக்கு தொழில் நிமித்தம் செல்ல முடியும்
* கார்பன் உமிழ்வு தொடர்பான ஐரோப்பிய யூனியனின் சி.ஏ.பி.எம்., விதிகளில் தளர்வு அளிக்கப்படும்
* ஐரோப்பிய யூனியனின் 144 சார்பு துறைகளில் இந்தியா நுழைய வாய்ப்பு கிடைக்கும். மேலும், நம் நாட்டின் 102 துறைகளில் ஐரோப்பிய யூனியனுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்
* தொழில் நிமித்தம் மேற்கொள்ளப்படும் குறுகிய கால, தற்காலிக மற்றும் வணிக பயணம் ஆகியவற்றுக்கான விதிமுறைகள் எளிதாக்கப்படும்
* ஐரோப்பிய யூனியனுக்கு ஒப்பந்த பணிகளுக்கு செல்லும் நிபுணர்களுக்காக 37 துறைகளிலும், தனிப்பட்ட நிபுணர்களுக்கு 17 துறைகளிலும் அனுமதி அளிக்க உறுதிமொழி
* ஐரோப்பிய நாடுகளில், இந்திய பாரம்பரிய மருத்துவ நிபுணர்கள் நமது நாட்டில் அவர்களின் தகுதி அடிப்படையில் பணியாற்ற முடியும்.
மிகப்பெரும் ஊக்கம்
ஐரோப்பிய யூனியனுடன் ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்களுக்கு பெரும் வாய்ப்புகளை கொண்டு வரும். வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும். இது உலகின் இரண்டு முக்கிய பொருளாதாரங்களுக்கு இடையே கூட்டு முயற்சியின் சிறந்த எடுத்துக்காட்டு. இந்த ஒப்பந்தம் இந்திய உற்பத்தி துறைக்கு மிகப்பெரிய ஊக்கத்தை வழங்கும்.
-நரேந்திர மோடி,
இந்திய பிரதமர்
ஒப்பந்தங்களின் தாய்
ஐரோப்பிய யூனியனும் இந்தியாவும் இன்று வரலாறு படைத்துள்ளன. உலகின் ஒப்பந்தங்களுக்கு எல்லாம் தாயாக, ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளோம். இதனால், இருதரப்பிலும் அதிக பயன் கிடைக்கும். இது ஒரு ஆரம்பம் தான். இந்தியாவுடன் எங்கள் உறவை இன்னும் வலிமையாக்குவோம்.
- உர்சுலா வான் டெர் லேயன்,
தலைவர், ஐரோப்பிய கமிஷன்

