ADDED : மார் 30, 2026 04:54 AM

நீரிழிவு மற்றும் உடல் எடை குறைப்புக்கான மருந்துகளின் புரட்சி 2026ல் வந்துவிடும் என முன்பொருமுறை எழுதியிருந்தோம். அந்த புரட்சி வந்து விட்டது.
ஆம்...
டென்மார்க் நாட்டை சேர்ந்த மருந்து உற்பத்தியாளர் 'நோவோ நோர்டிஸ்க்' மேற்கண்ட உடல் பிரச்னைகளுக்காக உருவாக்கிய 'வெகோவி' மற்றும் 'ஒஸம்பிக்' பெயரிலான 'செமாகுளூடைடு' மருந்துகளின் காப்புரிமை கடந்த வாரத்தோடு இந்தியாவில் காலாவதியாகி விட்டது.
இந்த மருந்து குறித்து நீங்கள் அறிந்திருக்கலாம். மிகவும் குறைந்த விலையில் நீரிழிவு மற்றும் உடல் எடை குறைப்பு சிகிச்சைக்கான மருந்தாக இந்தியாவில் இவை இருந்து வருகின்றன.
காப்புரிமை காலாவதியாகி விட்டதால், இனி இந்திய நிறுவனங்கள், இந்த மருந்துகளை தயாரிப்பதற்கான மிகப்பெரிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. நம் நாட்டில் 10 கோடி பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் அன்றாட மருந்து தேவையை இது பூர்த்தி செய்யும். இதோடு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளும் கொட்டிக்கிடக்கின்றன.
டூ இன் ஒன் மருந்து
மனித உடலில் சுரக்கும் ஹார்மோன் போன்ற இயற்கையான ஜி.எல்.பி.,1 (GLP-1) அமைப்பை ஆய்வகத்தில் உருவாக்க விஞ்ஞானிகள் முயன்றனர். அதன் வாயிலாக, ஜி.எல்.பி.,1 வகையை சேர்ந்த 'செமாகுளூடைடு' என்ற மருந்தை உருவாக்கினர்.
இந்த மருந்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையை மட்டும் கட்டுப்படுத்தவில்லை, உடல் எடையையும் குறைக்கிறது என்பதை கண்டுபிடித்தனர். இதனால் நீரிழிவோடு, உடல் எடை குறைப்புக்கும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது இந்த மருந்துக்கு காப்புரிமை காலாவதியாகி விட்டதால், மருந்து உற்பத்தியாளர்கள் உள்நாட்டு சந்தையை நோக்கமாக கொள்வதை விட ஏற்றுமதிக்கும் திட்டமிட்டு குறைந்த விலையில் வழங்கலாம். காரணம், இந்த ஆண்டோடு கனடா, துருக்கி மற்றும் பிரேசிலிலும் இந்த மருந்துகள் காலாவதியாக போகின்றன.
இதனால் என்ன என்று தோன்றலாம். இந்த நாடுகளில் நிறைய பேர் உடல் பருமனோடு வாழ்கின்றனர். இந்தியாவுக்கு இதுவொரு மிகப்பெரிய வாய்ப்பு. 'உலகின் மருந்துகடை' என்று நம் நாடு அழைக்கப்படுகிறது. உலகம் முழுதும் 20 சதவீத மருந்துகளை இந்தியா வினியோகிக்கிறது.
பேனா வடிவ மருந்து
குறிப்பாக மாத்திரைகள், கேப்சூல்கள் உற்பத்தியில் நம் நாடு ஒரு மன்னனாக இருக்கலாம். ஆனால், வெகோபி மற்றும் ஒஸம்பிக் மருந்துகள் மாத்திரை வடிவில் இல்லை. இது பேனா வடிவில், உடலுக்குள் மருந்தை உட்செலுத்தும் வகையில் உள்ளன. ஒரு கேட்ரிஜில் மருந்தை நிரப்பி, உடலில் செலுத்தினால் இந்த மருந்து நன்றாக வேலை செய்கிறது.
உலகின் எடை குறைப்பு மருந்து வினியோகத்தில் நம் நாடு முன்னோடியாக மாறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனால், அது அவ்வளவு எளிதானதல்ல. இதிலுள்ள முக்கியமான சவாலே பேனா போன்ற உட்செலுத்தும் முறைதான்.
மருந்து வினியோகிக்கும் உபகரணங்களில் குறிப்பாக உட்செலுத்தும் பேனாக்கள், துல்லியமான பிளாஸ்டிக், கண்ணாடி கேட்ரிஜ்ஸ், அதிநவீன மெல்லிய ஊசிகள், ஸ்பிரிங்ஸ் மற்றும் வாரந்தோறும் மாறுபடும் டோஸ் அமைப்புகளை கொண்டிருக்க வேண்டும்.
தயாரிப்பில் சவால்
தற்போது சிரிஞ்ச் மற்றும் இன்சுலின் பேனாக்கள் தயாரிப்பில் நமக்கு அனுபவம் உள்ளது. ஆனால், அதிக மருந்து கலவைகள், குறிப்பாக பேனா வகை கலவையான உயிரியல் மருந்துகள், குறிப்பிடத்தக்க அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஊசிகள் ஜப்பானிலிருந்தும், கண்ணாடி ஜெர்மனியிலிருந்தும், பேனாக்கள் சுவிட்சர்லாந்திலிருந்தும் வருகின்றன.
இதில் இன்னொரு சவாலும் உள்ளது. மருந்துகளை சுத்தமான சூழலில் தயார் செய்து, பரிசோதனைக்கு உட்படுத்தி, குளிரூட்டப்பட்ட அதாவது 2-8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தொழிற்சாலையிலிருந்து மருந்தகங்களுக்கு அனுப்ப வேண்டும். குளிரூட்டப்பட்ட மருந்து வினியோகத்தில் நம் நாடு மேம்பட்டுள்ளது. ஆனால், அது போதுமானதாக இல்லை.
வேகமாக வளர்கிறோம்
ஜி.எல்.பி.,1 வகை மருந்துகளை பெரிய அளவில் உலகின் பல சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆதரவு நமக்கு போதுமான அளவில் உள்ளது. ஆனால் வலிமையான, ஒழுங்கமைக்கப்பட்ட உட்கட்டமைப்பு, உலக ஏற்றுமதி சந்தையில் கோலோச்சும் அளவுக்கு இல்லை.
கொரோனா காலத்துக்கு பின், உயிரியல் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் ஊசி வாயிலாக வழங்கப்படும் மருந்துகள் ஆகிய துறைகளில் முதலீடுகள் அதிகரித்ததன் காரணமாக, ஆசிய -பசிபிக் பகுதியில் குளிர்ப்பதன தொடரின் திறன் குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளது. இதில், 2030 வரை இந்தியா வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
உற்பத்தி சார்பு ஊக்குவிப்பில் புதிய சேமிப்பு கிடங்குகள் மற்றும் கையாளக்கூடிய நிலையங்கள் ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் புனேவை சுற்றி அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உயிரியல் மருந்துகள் மற்றும் உட்செலுத்தும் ஊசிகள் ஏற்றுமதியை ஆதரிப்பவையாக அவை உள்ளன.
குளிர்ப்பதன வசதி கொண்ட வினியோகத்துக்கான ஜி.பி.எஸ்., லாரிகள் மற்றும் கிடங்குகள் மின்சார சேமிப்பை கொண்ட உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், குளிர்ப்பதன சேமிப்பு கிடங்கும் நாட்டில் குறிப்பிட்ட அளவில்தான் உள்ளது. குறிப்பாக, பெரிய மாநகரங்களில்தான் உள்ளது. செமாகுளுடைடு போன்ற உட்செலுத்தும் மருந்துகளை சேமிப்பது மற்றும் வினியோகிப்பது அவ்வளவு எளிதான வேலை இல்லை. அதை நம் நாடு சாத்தியப்படுத்தியாக வேண்டும்.
வாய்ப்பு கைகொடுக்குமா?
ஜி.எல்.பி., 1 மருந்து சந்தை வேகமாக வளரக்கூடியதாக உள்ளது. 2030ல் நீரிழிவு மற்றும் உடல் எடை குறைப்புக்கான மருந்து விற்பனை 5 மடங்கு அதிகரிக்கக்கூடிய திறன் உள்ளது. அதேபோல் உலகளவிலும் இதன் சந்தையை விரிவாக்குவதற்கான இடம் உள்ளது.
ஆனால், உண்மையான பிரச்னை என்னவென்றால் ஜி.எல்.பி.,1 மருந்தை செலுத்தும் பேனாக்கள் வழியாகத்தான் வினியோகிக்க முடியும். ஏற்கனவே இப்படித்தான் வினியோகிக்கப்படுகிறது. உலகின் விலை குறைந்த எடை குறைப்பு மருந்தை உற்பத்தி செய்வதற்கான தேர்வு நம்மிடம் உள்ளது.
இந்த வாய்ப்பை இந்தியா நழுவவிடக்கூடாது. காரணம் சீனாவிலும் கடந்த வாரம்தான் 'செமாகுளூடைடு' காப்புரிமை காலாவதியாகியுள்ளது. ஏற்கனவே 'செமாகுளூடைடு' திட்டத்தை செயல்படுத்த மருந்து வினியோக உபகரணங்கள், மேம்படுத்தப்பட்ட தொழிற்சாலைகளில் பேனாக்கள் உற்பத்தி என்று ஏற்றுமதி செய்வதற்கான வழிகள் சீனாவிடம் உள்ளன.
இருப்பினும் இந்தியாவுக்கான சவால்களை சரிசெய்து விட்டால், நம் நாட்டின் திறன்மிகு மருத்துவ துறை வாயிலாக, எடை குறைப்பு மருந்து தயாரிப்புக்கான உலக அளவிலான பந்தயத்தில் முந்த வாய்ப்பு இல்லாமல் இல்லை.
