இந்தியாவின் 'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றி ராணுவ கல்லுாரிகளில் பாடமாகும்!
இந்தியாவின் 'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றி ராணுவ கல்லுாரிகளில் பாடமாகும்!
ADDED : ஜூலை 26, 2025 01:22 PM

சென்னை:''ஆப்பரேஷன் சிந்துார், உலகளாவிய ராணுவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக இடம் பெறும். உலகில் உள்ள முன்னணி ராணுவ கல்லுாரிகளில், ஒரு பாடமாக கற்பிக்கப்படும்,'' என, கவர்னர் ரவி பேசினார்.
நாட்டிற்காக சேவை செய்யும், ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவையை பாராட்டி, அவர்களை கவுர விக்கும் விழா, கிண்டி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது.
சேவை ஆப்பரேஷன் சிந்துாரில் பங்கேற்று சிறப்பாக சேவையாற்றிய, 'மெட்ராஸ் ரெஜிமென்ட் பட்டாலியனை' சேர்ந்த வீரர்கள் மற்றும் ஆவடி ராணுவ படைக்கல பிரிவு வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது: நம் நாட்டின் முப்படையை சேர்ந்த வீரர்கள், நாட்டின் பாதுகாவலர்களாகவும், நம் குடும்பத்தோடு பிணைந்த, முக்கிய பாகமாகவும் இருக்கின்றனர். அவர்கள் மிகக் கடுமையான நிலப்பரப்புகளில் கூட, நாட்டிற்காக சேவை செய்கின்றனர்.
தொழில்நுட்பத்துடன் கூடிய போராக, தற்போது போர் சூழல் மாறி வருகிறது. இத்தகைய சூழ்நிலையை, நம் ராணுவத்தினர் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதை, நாம் பார்த்து வருகிறோம். ராணுவத்தின் ஒருங்கிணைப்பு என்பது, எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தி உள்ளது.
பஹல்காமில், அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி தருவதற்காக நடத்தப்பட்ட, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை, இந்தியாவின் தன்னிகரற்ற செயலாக அமைந்துள்ளது.
பெரும் பங்கு ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி, உலகளாவிய ராணுவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக இடம் பெறும். உலகில் உள்ள முன்னணி ராணுவ கல்லுாரிகளில், ஒரு பாடமாகவும் கற்பிக்கப்படும். வரும், 2047ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடைவதில், பெரும்பங்கு நம் ராணுவத் திடம் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், இந்திய ராணுவ தெற்கு பகுதி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர் சிங் பிரார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.