பரிசு கொடுப்பது தான் கடும் நடவடிக்கையா? முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி
பரிசு கொடுப்பது தான் கடும் நடவடிக்கையா? முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி
ADDED : நவ 13, 2026 05:46 AM

சென்னை: 'துணை சபாநாயகர், கள்ளக் குறிச்சி எம்.எல்.ஏ., இருவருக்கும் தீபாவளி பரிசு கொடுத்து, அனுப்பி வைப்பது தான் கடும் நடவடிக்கையா?' என, முதல்வர் விஜய்க்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
துணை சபாநாயகர் ரவிசங்கர், புகார் அளிக்க வந்தவரை தாக்கியதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதுபோல, கள்ளக்குறிச்சி த.வெ.க., - எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ், அம்மாவட்ட பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து, த.வெ.க.,- எம்.எல்.ஏ.,க்களை நேற்று முன்தினம் முதல்வர் விஜய் அழைத்து, கண்டித்தார். மேலும், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பட்டு வேட்டி, சட்டை, புடவை என பரிசுகள் வழங்கினார்.
இந்நிலையில், ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: 'தவறு செய்தால் விட மாட்டேன்' என, தன் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை விடுத்ததாக, செய்தித்தாள்களில் ஒரு தகவலை திட்டமிட்டு வெளியிட வைத்துள்ளனர். முதல்வரின் கண்டிப்பு உண்மையாக இருந்தால், என்ன செய்திருக்க வேண்டும்?
துணை சபாநாயகர் பதவியின் மாண்பை குலைத்தவர் மீது வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், கண்டிப்பான ஆபீசர், அந்த இருவருக்கும் தீபாவளி பரிசு கொடுத்து, வழியனுப்பி வைத்திருக்கிறார்.
இது தான் அந்த கடும் நடவடிக்கையா? 'பஞ்ச்' வசனம் மட்டுமே பேசி காலத்தை ஓட்ட, இது சினிமா இல்லை. 'ரியல் ஆக் ஷன்' எடுத்து, எவ்வளவு கண்டிப்பானவர் என்பதை முதல்வர் நிரூபிக்க வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்த பயனும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'ஆன்லைன் மாபியா' வாயிலாக 'ரீல்ஸ்' ஓட்டுகின்றனர்
கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு, தகாத குறுஞ்செய்தி அனுப்பிய, த.வெ.க., -எம்.எல்.ஏ., அருள் விக்னேஷை, முதல்வர் விஜய் இன்னமும் பாதுகாப்பது ஏன்? கோரிக்கை வைத்தவரை, அடித்து துன்புறுத்திய, துணை சபாநாயகர் மீது, நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? தப்பு செய்யும் கட்சியினர் மீது, நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை. அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம், த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை கூட்டம் என, 'டைவர்சன் பாலிடிக்சில்' முதல்வர் இறங்குகிறார்.
ஆலோசனை கூட்டத்தில், 'அனல் கக்கினார், அக்னி குழம்பை ஊற்றினார்' என, 'ஆன்லைன்' மாபியாவை வைத்து, 'ரீல்ஸ்' ஓட்டினால், மக்கள் மறந்து விடுவரா? முதல்வருக்கு மனசாட்சி இருந்தால், தவறு செய்யும் கட்சிக்காரர்களை கட்டி வைக்க வேண்டும்; இல்லையெனில் மக்கள் சக்தி தட்டி வைக்கும்.- உதயநிதி, எதிர்க்கட்சி தலைவர், தி.மு.க.,
