'லிப்ஸ்டிக்' போட்டதால் வேலை போச்சு; மேயர் பிரியா செய்தது சரியா?;
'லிப்ஸ்டிக்' போட்டதால் வேலை போச்சு; மேயர் பிரியா செய்தது சரியா?;
UPDATED : செப் 26, 2024 05:45 AM
ADDED : செப் 26, 2024 05:37 AM

சென்னை : மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு நிகராக, பெண் டபேதார், 'லிப்ஸ்டிக்' பூசி வலம் வந்ததால் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. லிப்ஸ்டிக் பூசியதால் தன்னை இடம் மாற்றம் செய்ததாக டபேதார் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், பணியை சரிவர மேற்கொள்ளததால் நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் டபேதாராக மாதவி, 50, என்பவர் பணியாற்றி வந்தார். இவர், சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் என்ற பெருமையைப் பெற்றவர்.
மாநகராட்சி கவுன்சில் கூட்டம், அரசு நிகழ்ச்சிகளில், மேயர் வருவதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக, முன்னால் நடந்து சென்று, வழிவிடும்படி ஒலி எழுப்பிக் கொண்டே செல்வார்.
இந்நிலையில், டபேதார் மாதவி, திடீரென மணலி மண்டல அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உரிய நேரத்திற்கு பணிக்கு வராததது, அலுவலக உத்தரவை பின்பற்றாதது போன்ற காரணங்களால், அவர் இடம் மாற்றப்பட்டதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. ஆனால், மேயர் பிரியாவுக்கு நிகராக லிப்ஸ்டிக் பூசி வலம் வந்ததால் தான் பணியிடம் மாற்றப்பட்டுள்ளதாக, டபேதார் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இப்பிரச்னையில் இரண்டு மாதத்திற்கு முன்பே, டபேதார் மாதவிக்கு மாநகராட்சி தரப்பில் அளிக்கப்பட்ட மெமோ, அதற்கு மாதவி அளித்துள்ள பதில் ஆகியவையும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆக., 6ம் தேதி தனக்கு அளிக்கப்பட்ட மெமோவுக்கு, டபேதார் மாதவி பதில் அளித்துள்ளார். அதை மேயரின் தனிப்பட்ட உதவியாளர் சிவசங்கருக்கு அனுப்பியுள்ளார்.
அதன் விபரம்:
அலுவலக நாட்களில், அலுவலகத்திற்கு உரிய நேரத்திற்கு வராமல் இருப்பது ஏன்?
நான் தினமும், வெகு தொலைவில் இருந்து அலுவலகத்திற்கு வந்து செல்கிறேன். அலுவலக பணி முடிந்து, தாமதமாக இரவு 8:00 அல்லது 9:00 மணிக்கு தான் செல்கிறேன். வீட்டிற்குச் செல்ல இரவு 11:00 மணிக்கு மேல் ஆகிறது. பின், சமைத்து சாப்பிட்டு படுக்க, நள்ளிரவு 1:00 மணி ஆகிறது.
மீண்டும் எழுந்து காலையில் பணிக்கு வர, உடம்பு சரியில்லாமல் போகிறது. என் கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், என்னால் வேகமாக நடக்க முடியவில்லை. இதனால், அலுவலக நேரத்திற்கு முன் வர இயலவில்லை. கடந்த இரண்டு நாட்களாகத் தான், அலுவலகத்திலிருந்து முன்னதாக செல்கிறேன்.
தொடர்ந்து காலதாமதமாக வருகிறீர்கள்?
பதில்: நான் தினமும் அலுவலகத்திற்கு, உரிய நேரத்தில் வந்து விடுகிறேன். ஆக., 6ம் தேதி காலதாமதமாக, காலை 10:30 மணிக்கு வர நேரிட்டது. அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க, மொபைல் போன் வேலை செய்யவில்லை.
முறைப் பணி நாட்களில், முறையாக பணிக்கு வராமல் தவிர்ப்பது?
என் முறைப்பணி காலங்களில், பணிக்கு வந்துள்ளேன். நீங்கள் குற்றம் சாட்டியதை போல், முறைப்பணி செய்யாத நாட்களை குறிப்பிட்டுக் காட்டவும்.
உயரதிகாரிகளின் ஆணையை உதாசினப்படுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனக்கு என்ன ஆணை வழங்கினீர்கள்; நான் எந்த ஆணையை உதாசீனப்படுத்தினேன். விவரமாக கூறவும்.
அலுவலக நடைமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தாங்கள் என்னை, உதட்டிற்கு பூசுகின்ற 'லிப் ஸ்டிக்' போடக் கூடாது எனக் கூறினீர்கள். அதை மீறி உதட்டு சாயம் பூசினேன். இது குற்றம் என்றால், எந்த அரசாணையில் உள்ளது என்று தெரியப்படுத்தவும். மேலும், யாரிடமும் பேசக் கூடாது; எந்த பிரிவுக்கும் போகக் கூடாது என தடுப்பது, மனித உரிமை மீறல்.
இவ்வாறு கேள்விகளுக்கு மாதவி எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார்.
இந்த மெமோ விளக்க கடிதம் வெளியானதை தொடர்ந்து, பெண் டபேதார் அதிக,' லிப் ஸ்டிக்' போட்டதால் தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியானது. டபேதாராக பணியாற்றிய முதல் பெண் என்ற பெருமை பெற்ற மாதவி, தற்போது, மணலி நகராட்சியில் அலுவலக உதவியாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
'லிப்ஸ்டிக்' விவகாரத்தில், டபேதார் மாதவி மணலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட பின், 'என் வீடு ஆவடியில் உள்ளது. அருகிலுள்ள மண்டலங்களுக்கு பணியிடம் ஒதுக்க வேண்டும் என, தொடர்ந்து அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். ஆனால், மேயர் அலுவலகத்தில் இருந்து, அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட 'அழுத்தம்' காரணமாக, அவருக்கு பணி மாறுதல் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த மாதவி, இப்பிரச்னையை பகிரங்கப்படுத்தி உள்ளார்.
இப்பிரச்னையில், சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள விளக்கம்:
மேயர் அலுவலகத்தில் டபேதாராக பணியாற்றிய எஸ்.பி.மாதவி என்பவர், தொடர்ந்து அலுவல் நடைமுறைகளை மீறினார். அலுவலகத்திற்கு முறையாக வராமல் தாமதமாக வருதல், பணிகளை மேற்கொள்ளாமல் இருத்தல் போன்ற தொடர் காரணங்களாலேயே, அலுவலக நடவடிக்கையின்படி, கடந்த மாதம் அவரிடம் குறிப்பாணை வாயிலாக விளக்கம் கேட்கப்பட்டது.
இதைத் தவிர, தனிப்பட்ட முறையில் அவரது ஒப்பனை குறித்து, எவ்வித விளக்கமும் கேட்கப்படவில்லை. விசாரணையும் நடத்தப்படவில்லை. அவரது ஒப்பனை நடவடிக்கைக்காக பணி மாறுதல் செய்யப்பட்டதாக வெளியான செய்தி, முற்றிலும் தவறானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
5 வயதில் இருந்தே லிப்ஸ்டிக் பழக்கம்
மேயர் பிரியா 'லிப் ஸ்டிக்' போடுவதால், நான் லிப்ஸ்டிக் போடக் கூடாது என்று நிபந்தனை ஏதும் உள்ளதா? அப்படி என்றால், எந்த பெண் பணியாளரும் லிப்ஸ்டிக் போட முடியாது. லிப்ஸ்டிக் போடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு, 5 வயதில் இருந்தே லிப்ஸ்டிக் போடும் பழக்கம் உள்ளது.
'ஏன் சரிவர பணி செய்யவில்லை' எனக் கேட்கின்றனர். மன்ற கூட்டம் நடக்கும் போதெல்லாம், அனைவரும் அமர்ந்து இருப்பர். நான், சாப்பிடாமல் கூட நின்று கொண்டே இருப்பேன். அலுவலக பணியில் இருக்கும் போது, என்னை என்ன ஜாதி என, அதிகாரிகள் கேட்கின்றனர். அரசு அலுவலகங்களில் ஏன் ஜாதியை கேட்க வேண்டும்.
என்னிடம் முறைப்படி மேயர் இதுவரை எந்த கேள்வியும் கேட்கவில்லை. அதிகாரிகளின் எந்த ஒரு ஆணையையும் உதாசீனப்படுத்தவில்லை. அப்படி இருக்கையில், ஆவடியில் குடியிருக்கும் என்னை, தண்டனையாக மணலிக்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர்.
- மாதவி,
முன்னாள் டபேதார், சென்னை மாநகராட்சி.
புத்தி சொல்லியும் லிப்ஸ்டிக் போட்டார்
மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடந்த மகளிர் தினத்தில், மாநகராட்சி பெண் ஊழியர்கள் இடையே நடந்த, 'பேஷன் ஷோ'வில், மாதவி பங்கேற்றார். அப்போது, அவரது 'லிப் ஸ்டிக்' பலரால் விமர்சிக்கப்பட்டது. அமைச்சர்கள் நிகழ்ச்சி, இந்தியாவிற்கான வெளிநாட்டு துாதர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளிலும், அவர் கலர் கலராக 'லிப்ஸ்டிக்' பூசினார். அதுபோன்ற நிகழ்ச்சிகளின் போது 'லிப்ஸ்டிக்' பூச வேண்டாம் என்று தான் அறிவுறுத்தப்பட்டது.
பணிக்கு உரிய நேரத்தில் வராதது, பணியில் அலட்சியம், அதிகாரிகள் உத்தரவை மீறுதல் போன்ற காரணத்தால் தான், அவருக்கு முறைப்படி 'மெமோ' அளிக்கப்பட்டு, பணியிட மாறுதல் செய்யப்பட்டு உள்ளார். அவரது பணியிட மாற்றத்திற்கு, எவ்வித காழ்ப்புணர்ச்சியும் காரணமில்லை. இது, நிர்வாக ரீதியிலான நடவடிக்கை மட்டுமே.
- மேயர் பிரியா,
சென்னை மாநகராட்சி
![]() |
லிப்ஸ்டிக் போட்டு
பிரச்னை எழுப்ப முடிவு
'லிப்ஸ்டிக்' விவகாரத்தில் டபேதார் மாதவிக்கு ஆதரவாக இருப்பேன். வரும், 27ம் தேதி நடைபெறும் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில், நிச்சயம் இச்சம்பவம் குறித்து பிரச்னை எழுப்புவேன். அப்போது, நானும் லிப்ஸ்டிக் போட்டு பங்கேற்பேன்.
- உமா ஆனந்த்,
பா.ஜ., கவுன்சிலர், 134வது வார்டு,