ADDED : மார் 03, 2024 03:24 AM

டில்லியில் ஏழு லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த ஏழு தொகுதிகளையும் பா.ஜ., தன் வசம் வைத்துள்ளது. ஆனால், வரக் கூடிய தேர்தலில் இது நீடிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது; காரணம் காங்., - -ஆம் ஆத்மி கூட்டணி.
கெஜ்ரிவாலின் கட்சி நான்கு தொகுதிகளிலும், காங்., மூன்று தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இதில், ஆம் ஆத்மி கட்சி நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டது.
இந்நிலையில் மீண்டும், ஏழு தொகுதிகளிலும் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளது பா.ஜ.,
காங்., -ஆம் ஆத்மி கூட்டணி நிச்சயம் தங்கள் வெற்றியை பாதிக்கும் என்பதை டில்லி பா.ஜ., தலைவர்கள் உணர்ந்துள்ளனர்.
எனவே, பிரபலமானவர்களை களம் இறக்க பா.ஜ., முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் டில்லி சாந்தினி சவுக் பகுதியைச் சார்ந்தவர்.
கனடா நாட்டின் குடிமகனாக இருந்தவர்; அதைத் துறந்து தற்போது இந்திய குடிமகனாகி விட்டார். 'சாந்தினி சவுக் தொகுதியில் காங்., வேட்பாளருக்கு எதிராக நடிகர் அக்ஷய் குமார் பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுவார்' என, பேச்சு அடிபடுகிறது.
'மறைந்த முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகளுக்கும் புதுடில்லி தொகுதி சீட் தரப்படும்' என்கின்றனர். காங்கிரசும், ஆம் ஆத்மியும் தனியாக போட்டியிட்டதால், இதுவரை பா.ஜ., சுலபமாக வெற்றி பெற்று வந்தது; ஆனால் இந்த முறை சற்று கடினம் தான்.
இதற்கிடையே இன்னொரு விஷயமும் அலசப்படுகிறது. மதுபான லைசென்ஸ் வழக்கில், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பியும், இதுவரை ஆஜராகாமல் தவிர்த்து வருகிறார். 'விரைவில் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை கைது செய்யும்; அப்படி கைது செய்தால், காங்., - -ஆம் ஆத்மி கூட்டணி முறிந்து விடும்' என்கின்றனர். சில காங்., தலைவர்கள்.
'ஆனால் தேர்தல் சமயத்தில் கைதானால், கெஜ்ரிவாலுக்கு அனுதாப ஆதரவு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது; எனவே, அவர் கைது செய்யப்படுவாரா' என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

