ADDED : மே 10, 2026 03:58 AM

- நமது நிருபர் -:
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில், கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், பொதுச்செயலர் பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்படக்கூடும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி, மூன்றாம் இடத்தையே பெற்றது. மொத்தம் 169 தொகுதிகளில் களம் கண்ட அ.தி.மு.க.,வால், 47 தொகுதிகளை மட்டுமே வசப்படுத்த முடிந்தது. 100 இடங்களுக்கு மேல், 'டிபாசிட்'டையும் இழந்தது. கட்சியின் பொதுச்செயலராக பழனிசாமி பதவி ஏற்ற பின், அ.தி.மு.க., தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறது. இது, கட்சியினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 7ம் தேதி சென்னை எம்.ஆர்.சி., நகரில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அலுவலகத்திலும், வேலுமணியின் சென்னை இல்லத்திலும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் அடுத்தடுத்து வந்து சென்றனர். அப்போது, பொதுச்செயலர் பதவியில் இருந்து பழனிசாமியை மாற்றுவது குறித்தும், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அந்த சமயத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சு எழுந்தது. இதனால், பழனிசாமியை மாற்றுவது குறித்த யோசனை ஒத்தி வைக்கப்பட்டு, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. பின், புதுச்சேரி 'ரிசார்ட்'டில் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், அ.தி.மு.க., ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிக்க, தி.மு.க., தயங்கியதாகவும், வி.சி.க., தலைவர் திருமாவளவனை முதல்வராக்க முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இது குறித்து முடிவு செய்ய, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நேற்று காலை 10:00 மணிக்கு பழனிசாமியின் வீட்டிற்கு வந்தனர். திருமாவளவனை முதல்வராக்க விரும்பாத பழனிசாமி, 'வேறு கட்சி நபரை முதல்வராக்கினால் அ.தி.மு.க., அழிந்து விடும்' என்று கூறியிருக்கிறார். அதனால் கோபமுற்ற சண்முகம், 'இப்போது மட்டும் கட்சியில் என்ன இருக்கிறது? எ திர்க்கட்சியாக கூட இல்லாமல் மூன்றாம் இடத்துக்கு வந்து விட்டோம்' என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
'அ.தி.மு.க.,வில் இருந்து ஒருவர் முதல்வரானால், நான் ஒப்புக் கொள்வேன்' என பழனிசாமி கூற, 'அதையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்; இப்போது ஆட்சி அமைத்தால் தான் எல்லாருக்கும் நல்லது' என வேலுமணி கூறியுள்ளார். ஆனால், பழனிசாமி ஏற்கவில்லை.
'மேலும், தனக்கு எதிராக பேசிய முன்னாள் அமைச்சர்களிடம், 'உங்கள் மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் வென்றுள்ளீர்கள்' என்று கேட்க, அவர்கள், 'நீங்கள் தான் எல்லாரையும் தோற்க வைத்து விட்டீர்கள்' என கூற, அங்கு கடும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.
ஒரு கட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறி விட, கோபமடைந்த பழனிசாமி, 'ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்' என அறிவிப்பு வெளியிட்டார். இதனால், கோபத்தின் உச்சத்துக்கே சென்ற எம்.எல்.ஏ.,க்கள் 35 பேர், சி.வி.சண்முகம் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு வேலுமணியும் வர, பழனிசாமி இல்லாமல் தனியாக ஒரு ஆலோசனை நடந்தது. இந்தக் கூட்டத்தில், த.வெ.க.,வுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க சம்மதம் என்று, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் 35 பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன் பிறகு, முன்னாள் அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட சிலர், சண்முகம், வேலுமணி ஆகியோரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்த மு யன்றுள்ளனர்; அ.தி.மு.க., மேலும் ஒரு பிளவை சந்திக்காமல் இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
