தடம் மாறும் நெல்லை மேற்கு புறவழிச்சாலை: ஆளுங்கட்சி முக்கியஸ்தர் குடும்ப நிலத்தை காக்கும் முயற்சியா?
தடம் மாறும் நெல்லை மேற்கு புறவழிச்சாலை: ஆளுங்கட்சி முக்கியஸ்தர் குடும்ப நிலத்தை காக்கும் முயற்சியா?
UPDATED : டிச 18, 2024 05:58 AM
ADDED : டிச 18, 2024 02:21 AM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் அமைய உள்ள மேற்கு புறவழிச்சாலை திட்ட வழித்தடம், ஆளுங்கட்சி முக்கிய பிரமுகரின் குடும்ப நிலம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மாற்றப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
திருநெல்வேலி நகரில் நெரிசலை தவிர்க்க, மதுரை - நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் கொங்கந்தான்பாறை விலக்கு முதல் தருவை, -கோபாலசமுத்திரம், சுத்தமல்லி, -சத்திரம், புதுக்குளம்,- தாழையூத்து வரை, 32 கி.மீ.,க்கு புதிய மேற்கு புறவழிச்சாலை அமைக்க, 2016ல் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக அம்பாசமுத்திரம், தென்காசி, சங்கரன்கோவில் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் திருநெல்வேலி நகர பகுதிக்குள் வராமல் மதுரை அல்லது நாகர்கோவில் நெடுஞ்சாலைக்கு செல்ல முடியும்.
நில எடுப்பு போன்றவற்றில் தாமதம் காரணமாக தற்போது தான், 350 கோடி ரூபாய் செலவில் பணிகளை துவக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. திட்டத்தை ஜனவரியில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். மதுரை சாலையில், தாழையூத்து புது காலனியை கடந்து நாரணம்மாள்புரம் வடக்கு பகுதியில் புதிய சாலை துவங்குகிறது. அங்கு மதுரையைச் சேர்ந்த ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் ஒருவரது குடும்ப நிலம் உள்ளது.
அவர் ஆட்சேபம் தெரிவித்த போது, அரசு திட்டம், பொது நலன் பணிகள் என்பதாலும், திட்டம் துவங்கி விட்டதாகவும், இனி ரத்து செய்ய முடியாது என்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அவருக்கு பதில் அளித்தனர். இந்நிலையில், 2021ல் தி.மு.க., ஆட்சி ஏற்பட்ட பின், அவருக்கு ஆதரவாக நெடுஞ்சாலைத்துறையினர் திட்டத்தையே மாற்றி விட்டனர்.
![]() |
நாரணம்மாள்புரம் வடக்கு பகுதியில் துவங்குவதற்கு பதிலாக தாழையூத்து இந்தியா சிமென்ட்ஸ் ஆலைக்கு அருகில் உள்ள பண்டாரகுளம் பகுதியில் புறவழிச்சாலை துவங்கி, வடக்கு நோக்கி சென்று பழைய திட்டத்தில் சேர்கிறது. இதனால் முந்தைய திட்டத்தை விட, 4 கி.மீ., துாரம் அதிகரிக்கிறது. மேலும், இந்தியா சிமென்ட்ஸ் ஆலை அருகில் உள்ள சங்கர் மேல்நிலைப் பள்ளி பகுதியில் சாலை அமைகிறது. அங்கு படிக்கும் 1,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும். மேலும், சிமென்ட் ஆலைக்கு வந்து செல்லும் லாரிகளால் புதிய சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இது குறித்து, சமூக ஆர்வலர் எஸ்.பி., முத்துராமன், நெடுஞ்சாலை துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அளித்துள்ள மனுவில், 'முந்தைய நாரணம்மாள்புரம் வடக்கு பகுதியிலேயே புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 'தாழையூத்தில் துவங்கினால் திட்டத்தின் நோக்கமே சிதைந்து விடும். திட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்' என, கூறியிருந்தார்.
ஆனால், அவருக்கு பதில் அளித்த அதிகாரிகள், 'அரசுக்கு நிதிச்சுமையை குறைப்பதற்காகவே திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒத்துழைப்பு தர வேண்டும்' என, கேட்டுக் கொண்டனர். திருநெல்வேலி நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் வரக்கூடாது என்பதற்காக துவக்கப்படும் புறவழிச் சாலை திட்டத்தை தாழையூத்து பள்ளி, சிமென்ட் ஆலை, கல் குவாரிகள் பகுதியிலேயே துவக்குவது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதே நெல்லை நகர மக்களின் கருத்தாக உள்ளது.